அரசியலில் பெரிய சூரர்களையும் தேர்தல் வெறும் சூனா பானா!வாக்கிடும் என்பதற்கு மிகப்பெரிய உதாரணம் இது. 
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் பிரசாரத்தின் போது ‘இந்த தேர்தல் முடிந்த பின் நாங்கள் டெல்லியில் இருப்போம். இந்த நாட்டின் பிரதமர் யார்? என்பதை முடிவு செய்வதில் முக்கிய அங்கமாக எங்கள் கட்சி இருக்கும்.’ இப்படித்தான் நாற்பது தொகுதிகளிலும் பேசினார்  டி.டி.வி.தினகரன். ஆனால் தேர்தலின் முடிவுகள் வந்தபோது டிபாசீட்டை இழந்தது மட்டுமில்லை, எக்கச்சக்கமான பூத்களில் ஒரு ஓட்டு கூட வாங்காமல் மிக மோசமான தோல்வியை தழுவியிருந்தது அ.ம.மு.க. தங்களின் சரிவை விட, தினகரனின் தோல்வியை மிகப்பெரிய வெற்றியாக கொண்டாடியது அ.தி.மு.க. 

இந்த சரிவுக்குப் பின் தினகரனின் அரசியல் மற்றும் பர்ஷனல் வாழ்க்கையில் ஏகப்பட்ட பிரச்னைகள். ‘நான் சொன்னபடி அரசியல் பண்ணாம, உன் இஷ்டத்துக்குப் பண்ணி அசிங்கப்படுத்திட்ட.’ என்று சிறைக்கு அழைத்து வைத்து சசிகலா திட்டியது, இளவரசியின் மகன் விவேக்குடன் மோதல் முற்றியது, தன் கட்சியின் மிக முக்கிய தலைகளான தங்கத்தமிழ்செல்வன் மற்றும் இசக்கி சுப்பையா ஆகியோர் கழன்றது என்று திரும்பிய திசையெல்லாம் தினகரனுக்கு அடி, அடி, செம்ம அடி. ஆனாலும் வெளியில் தன் கலக்கத்தைக் காட்டாமல் கூலாக பேட்டி கொடுப்பவர், உள்ளுக்குள் புழுங்கிக் கொண்டிருக்கிறார். இப்படியே மன அழுத்தத்தில் இருந்தால் சிக்கலாகிவிடும் என்பதால் சமீபத்தில் சில நாட்களுக்கு முன் தன்னை ரிலாக்ஸ் செய்து கொள்ள காட்டு பங்களா ஒன்றில் ஒதுங்கினாராம் தினகரன். 

இது பற்றி விரிவாக பேசுகிறது தென் மாவட்ட உளவுத்துறை போலீஸ்.  எங்கே இருக்கிறது அந்த பங்களா?...
திருநெல்வேலி மாவட்டம் திருக்குறங்குடி பகுதியில் மலை அடிவாரத்தில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் ஏக வசதிகளுடன் கூடிய ஒரு பங்களா இருக்கிறது. இது அ.ம.மு.க.வின் தென்மண்டல அமைப்புச் செயலாளரான, கடம்பூர் ஜமீன் மாணிக்கராஜாவிற்கு சொந்தமானது. இங்கேதான் சில நாட்களாக தினகரன்  காடு ஒதுங்கி, தன்னை கூல் செய்து கொண்டாராம். 
அங்கே என்ன செய்தாராம் தினகரன்?..... அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தென்மண்டல மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் யாருக்கும்  எந்த அறிவிப்பும் இல்லாமல், வெகு சாதாரண காரில், கூட இரண்டு நபர்களுடன் அந்த பங்களாவுக்கு சென்றிருக்கிறார் தினகரன். 

அமைதியான மலையடிவார சூழல், மிகப்பெரிய ஹால், ரம்மியமான படுக்கையறைகள், கேட்டதையெல்லாம் சுவையாய் சமைத்துத் தர ஆட்கள் என்று இருந்ததால் தினகரன் தன் மன பாரங்களையெல்லாம் மூட்டைகட்டிவிட்டு அங்கே ரெஸ்ட் எடுத்திருக்கிறார். இரவு பனிரெண்டு மணிக்கு மேல் டி.டி.வியும், அவருடன் வந்த நண்பர்களும் அங்கிருக்கும் நம்பியாற்றில் குளித்திருக்கிறார்கள். பங்களாவிலிருந்து ஆறு வரை நடக்கும்போது ஆவேசமாக தனது அரசியல் பிரச்னைகளை நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டே வந்திருக்கிறார் தினா. அதே ஆவேசத்துடனே ஆற்றில் குளித்திருக்கிறார். குளிக்கும் போதும் தன் குடும்பத்தினுள் இருந்து கொண்டு தனக்கு குடைச்சல் கொடுக்கும் விவேக் உள்ளிட்ட சிலரைப்பற்றி கடுப்பாய் பேசியிருக்கிறார். குளித்து முடித்து, பசியோடு வரும் தினகரனுக்காக ஆற்றின் கரையிலேயே பக்கா கிராமிய ஸ்டைலில் நாட்டுக்கோழியை வறுத்து, உணைவை தயார் செய்து வைத்துள்ளார் கையாள். நிம்மதியாய் சாப்பிட்டுவிட்டு, அமைதியாக ஆற்றங்கரையில் அதிகாலை வரைக்கும் படுத்திருந்துவிட்டு, நண்பர்களுடன் சில அரசியல் ஆலோசனையையும் முடித்துவிட்டு அதன் பிறகே பங்களாவுக்கு திரும்பியிருக்கிறார். 

தினகரனின் இந்த விசிட்டையும், மாணிக்கராஜாவின் அந்த காட்டுப் பங்களா பற்றியும் வெளிப்படையாக பேசியிருக்கும் திருக்குறுங்குடி சி.பி.ஐ. நிர்வாகி பெரும்படையார் ‘இந்த பங்களாவுக்கு தினகரன் அடிக்கடி வர ஆரம்பிச்சிருக்கிறார். காலை நேரங்களில் அவர் டிரெக்கிங் போறதை  சிலர் பார்த்திருக்கிறாங்க.’ என்றிருக்கிறார். தங்களிடம் சொல்லாமல் தங்களின் தலைவர் இப்படி காடு ஒதுங்குவதை சற்றே அதிர்ச்சியுடன் பார்க்கின்றனர் ஏன்? என்று கேள்வியும் எழுப்புகின்றனர் அ.ம.மு.க. நிர்வாகிகள். 

ஓ.கே.........இனி அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, ஜெயக்குமார் ஆகியோர் தினகரனின் இந்த காட்டு வாழ்க்கை பற்றி தங்களின் மேலான கருத்துக்களை அள்ளிவிடலாம்!