Asianet News TamilAsianet News Tamil

ஆர்.கே.நகருக்கு நாகராஜ சோழன் எம்.எல்.ஏ என்ன நல்லது செய்தார்..? பன்னீர்செல்வத்தை கலாய்த்த தினகரன்..!

dinakaran teased panneerselvam in rk nagar campaign
dinakaran teased panneerselvam in rk nagar campaign
Author
First Published Dec 17, 2017, 6:10 PM IST


அமைதிப்படை திரைப்படத்தில் வரும் நாகராஜ சோழன் எம்.எல்.ஏ கதாபாத்திரத்தோடு துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை  ஒப்பிட்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரத்தில் தினகரன் கிண்டலடித்துள்ளார்.

1990-களில் கட்சியில் சாதாரண நிலையில் இருந்தார் பன்னீர்செல்வம். அதன்பிறகு தினகரனால் அடையாளம் காட்டப்பட்ட பன்னீர்செல்வம், இன்றைக்கு தினகரனையே கட்சியில் சேர்த்துக்கொள்ள முடியாது என்று கூறும் அளவுக்கு அபரிமிதமான வளர்ச்சி அடைந்துள்ளார். பால் பண்ணையும் நண்பருடன் சேர்ந்து டீக்கடையும் நடத்திவந்த பன்னீர்செல்வம், அவ்வப்போது அதிமுக பொதுக்கூட்டங்களுக்கு போய்வந்துள்ளார். 

1987-ல் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக, ஜானகி மற்றும் ஜெயலலிதா தலைமையில் இரு அணிகளாக செயல்பட்டபோது, பெரியகுளம் ஜானகி அணிக்கு பன்னீர்செல்வம் நகர செயலாளரானார்.  1991-ல் அதிமுக மீண்டும் இணைந்த பிறகு. முதன்முதலில் பெரியகுளம் நகர கூட்டுறவு வங்கியின் இயக்குநரானார். அதன்பிறகு பெரியகுளம் அதிமுக நகர்மன்ற தலைவராக இருந்தார்.

ஜெயலலிதாவின் அரசியல் வாரிசாக அறிவித்துக்கொண்ட தினகரன், 1999-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தினகரன் எம்.பியாக தேர்வான போது பெரியகுளம் நகர்மன்ற தலைவராக இருந்தவர் பன்னீர்செல்வம். இதன்பிறகுதான் பன்னீர்செல்வத்துக்கு அடித்தது ஜாக்பாட். அந்த காலக்கட்டத்தில் தினகரனுடன் பன்னீர்செல்வத்துக்கு நெருக்கம் ஏற்பட்டது.

இந்த நெருக்கமே 2001-ம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் பெரியகுளம் தொகுதியில்  பன்னீர்செல்வம் போட்டியிட வாய்ப்பு கிடைக்க காரணமாக அமைந்தது. அந்த தேர்தலில் போட்டியிட்டு பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ ஆனார். பன்னீர்செல்வம், தனது அடக்கத்தாலும் பணிவாலும் சசிகலா குடும்பத்தைக் கவர்ந்தார். பன்னீர்செல்வத்தின் அடக்கமும் பணிவும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவையும் கவர்ந்தது. இதன் விளைவாக முதன்முறை சட்டசபைக்கு சென்றதுமே அமைச்சரும் ஆனார். வருவாய்த்துறை அமைச்சராக இருந்தார் பன்னீர்செல்வம்.

2001-ம் ஆண்டில் டான்சி வழக்கில் ஜெயலலிதா, முதல்வர் பதவியை இழந்தபோது, பன்னீர்செல்வம் முதல்வராக்கப்பட்டார். கட்சியில் இருக்கும் சீனியர்களை விட்டுவிட்டு பன்னீர்செல்வம் முதல்வராக்கப்பட்டது கட்சியின் மூத்த நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஆனாலும் தனது அடக்கத்தாலும் பணிவாலும் முதல்வர் பதவியை அடைந்தார் பன்னீர்செல்வம்.

அந்த நேரத்தில் சொல்வதை எல்லாம் கேட்டு நடக்கும் ஒருவர் சசிகலா குடும்பத்திற்கு தேவைப்பட்டது. அவர்தான் பன்னீர்செல்வம். எனவேதான் அவர் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். அதற்கேற்றாற்போலவே ஜெயலலிதா விடுதலை ஆனபின் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அதேபோல் 2014-ம் ஆண்டு சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை சென்றபோது பன்னீர்செல்வம் தான் மீண்டும் முதல்வராக்கப்பட்டார். அந்த வழக்கிலிருந்தும் ஜெயலலிதா சிறையிலிருந்து வந்தபின், முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார் பன்னீர்செல்வம்.

முதல்வர் பதவி தனக்கு கிடைத்தாலும் அதை வழங்கிய ஜெயலலிதாவுக்காக இரண்டு முறையும் அந்த பதவியை ராஜினாமா செய்தார் பன்னீர்செல்வம். பன்னீர்செல்வத்தின் இந்த நன்றியும் அடக்கமும் மேலும் மேலும் சசிகலாவையும் அவரது குடும்பத்தையும் கவர்ந்தது. எனவே நாம் கேட்கும் போது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிடுவார் என்ற நம்பிக்கையில், ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு முதல்வராக்கப்பட்டார் பன்னீர்செல்வம்.

ஆனால் இந்த முறை நினைத்தது ஒன்று.. நடந்தது ஒன்று.. பதவியை ராஜினாமா செய்யச் சொன்னதும் பொங்கி எழுந்த பன்னீர்செல்வம், தர்மயுத்தம் நடத்தினார். 

கட்சியில் சாதாரண நிலையில் இருந்த அவர், 2001 சட்டசபைத் தேர்தலில் நின்று எம்.எல்.ஏ ஆக முக்கிய காரணமாக இருந்த தினகரனையும் கட்சியில் அவரது வளர்ச்சிக்கு காரணமாக இருந்த சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரையுமே கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையுடன் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்.

பன்னீர்செல்வத்தின் போர்க்கொடிக்கு பாஜகவும் ஆதரவளிக்க முதல்வர் பழனிசாமி அணிக்கு வேறு வழி தெரியவில்லை. அழுத்தம் அதிகரிக்க அதிகரிக்க ஒரு வழியாக பன்னீர்செல்வத்தை இணைத்துக்கொண்டு சசிகலாவையும் தினகரனையும் கட்சியிலிருந்து ஒதுக்கிவிட்டனர். 

தற்போது தினகரன் திரும்ப வந்தால் கூட சேர்த்துக்கொள்ள முடியாது என திட்டவட்டமாக கூறும் அளவுக்கு கட்சியில் தன்னை வளர்த்து விட்டவர்களையே கட்சியிலிருந்து நீக்கும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறார் பன்னீர்செல்வம்.

ஆனாலும் கட்சியில் யாருனே தெரியாத பன்னீர்செல்வத்தை வளர்த்துவிட்டதே தினகரன் தான் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் தினகரன் ஆதரவாளர்கள் மீம்ஸ்களை தெறிக்கவிடுகின்றனர். அமைதிப்படை திரைப்படத்தை ஒப்பிட்டு மீம்ஸ்கள் பறந்தன.

இந்நிலையில், ஆர்.கே.நகர் தேர்தல் பிரசாரத்தில், தற்போதைய துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் ஆரம்பகால நிலையை சுட்டிக்காட்டும் வகையில், தினகரன் கிண்டலடித்துள்ளார்.

பிரசாரத்தில் பேசிய தினகரன், ஆர்.கே.நகர் தொகுதியின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற ஜெயலலிதா திட்டங்களை நிறைவேற்றினார். கடந்த முறை நடக்க இருந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்தாகி 9 மாதங்களாகின்றன. இந்த இடைப்பட்ட காலத்தில், நாகராஜ சோழன் எம்.எல்.ஏவாக இருக்கும் பன்னீர்செல்வம், ஆர்.கே.நகரில் ஏதாவது திட்டங்களை செயல்படுத்தியுள்ளாரா? என பன்னீர்செல்வத்தை கிண்டலடித்து கேள்வி எழுப்பினார்.

மேலும், ஆர்.கே.நகரில் போட்டி என்பது திமுகவுக்கும் தனக்கும்தான் எனவும் இரட்டை இலை போட்டியிலேயே இல்லை எனவும் தெரிவித்தார். இரட்டை இலையை மீட்கவே குக்கர் சின்னத்தில் வெற்றி பெற தான் போராடுவதாகவும் தினகரன் தெரிவித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios