dinakaran suture plan to retain his supporters

பேரவை ஒன்றைத் தொடங்கி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட தனது ஆதரவாளர்களுக்கு பதவி வழங்க தினகரன் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆர்.கே.நகரில் சுயேட்சையாக போட்டியிட்ட தினகரன், ஆளுங்கட்சியான அதிமுக வேட்பாளரை 40000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்த வெற்றி தினகரன் தரப்பிடையே உற்சாகத்தையும் ஆட்சியாளர்களிடையே கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

முதலில், தினகரனுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் அவரது ஆதரவாளர்களான நாஞ்சில் சம்பத், புகழேந்தி, சி.ஆர்.சரஸ்வதி, கலைராஜன், வெற்றிவேல் ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதிலும் உள்ள தினகரன் ஆதரவாளர்கள் 164 பேர் கட்சி பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டனர். 

அதிமுகவிலிருந்து நீக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கே உள்ளது. அவரைத்தவிர வேறு யாரும் யாரையும் கட்சியிலிருந்து நீக்க முடியாது என தினகரனும் அவரது ஆதரவாளர்களும் தெரிவித்துவருகின்றனர். ஆனாலும் தினகரனின் ஆதரவாளர்களின் களையெடுப்பு தொடர்ந்து நிகழும் என்றே கூறப்படுகிறது.

இந்நிலையில், அதிமுகவிலிருந்து நீக்கப்படும் தனது ஆதரவாளர்களுக்கு உற்சாகத்தை வழங்கும் வகையில், அவர்களுக்கு பதவி வழங்குவதற்காக புதிய பேரவை ஒன்றை தொடங்க தினகரன் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று தினகரன் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

அந்த பேரவையில் உறுப்பினர்களை சேர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாம். அதன்படி, உறுப்பினர் சேர்க்கை படிவங்கள், மொபைல் அப்ளிகேஷன் ஆகியவை தயாரிக்கும் பணிகள் நடந்துவருகிறதாம். ஆட்சியாளர்களை மிரட்டும் வகையில், அந்த பேரவையில் உறுப்பினர்களை சேர்த்து தனது பலத்தை காட்ட தினகரன் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் பேரவை குறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக தினகரன் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.