dinakaran supporters removed from admk

தினகரன் ஆதரவாளர்கள் மேலும் 103 பேர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

ஆர்.கே.நகரில் அதிமுகவை வீழ்த்தி தினகரன் அபார வெற்றி பெற்றார். தினகரனின் வெற்றியை அடுத்து அதிமுகவிலிருந்து தினகரன் ஆதரவாளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டு வருகின்றனர். 

கட்சியின் விதிகளை மீறி செயல்படுவதாகக் கூறி தினகரனின் ஆதரவாளர்கள் நாஞ்சில் சம்பத், புகழேந்தி, வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன், கலைராஜன் ஆகியோரை அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியும் நீக்கினர்.

அவர்களை அடுத்து நூற்றுக்கும் மேற்பட்டோர் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். தினகரனின் ஆதரவாளர்கள் மாவட்ட வாரியாக நீக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் 29ம் தேதியன்று, தருமபுரி, திருப்பூர், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த தினகரன் ஆதரவாளர்கள் 164 பேர் நீக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக கூறி நீக்கப்பட்டனர்.

கடந்த 12ம் தேதி நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இலக்கிய அணிச் செயலாளரும், முன்னாள் எம்பியுமான எஸ். அன்பழகன் உட்பட அம்மாவட்டத்தைச் சேர்ந்த 29 பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். முன்னாள் எம்எல்ஏவும் கோவை புறநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவருமான மா.பா.ரோகிணி என்ற கிருஷ்ணகுமார் உட்பட 6 பேரும், நீலகிரி மாவட்டத்தில் 30 பேரும் சேலம் புறநகர் மாவட்ட முன்னாள் எம்எல்ஏ எஸ்.சி.வெங்கடாசலம் உள்ளிட்ட 38 பேர் என 103 பேர் கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதாகவும் கூறி கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.

இதுவரை 400க்கும் மேற்பட்ட தினகரனின் ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தஞ்சாவூர் தெற்கு மாவட்டம், சேலம் நகர மாவட்டம், அதிமுக எம்ஜிஆர் இளைஞர் பேரவை ஆகியவற்றைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட தினகரன் ஆதரவாளர்களை பழனிசாமியும் பன்னீர்செல்வமும் நீக்கியுள்ளனர்.


மாவட்ட வாரியாக நூற்றுக்கணக்கான தினகரன் ஆதரவாளர்களை நீக்குவதற்கே தனி நேரம் ஒதுக்கி முதல்வரும் துணைமுதல்வரும் செயல்பட்டு வருகின்றனர். தினகரனின் ஆதரவாளர்களை நீக்கும் பணியை செய்வதிலேயே ஆட்சியாளர்கள் களைப்படைந்து விட்டால், மக்கள் பணியை எப்படி செய்வர்? என்ற கேள்வி மக்கள் மனதில் எழுகிறது.