Dinakaran Supporter Thanga Tamilselvan stages walkout from TN assembly

சட்டப்பேரவையில் இருந்து டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன் வெளிநடப்பு செய்துள்ளார். ஆண்டிப்பட்டி தொகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்காததைக் கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளதாக தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை, இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் கூடியது. தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்காக, சட்டப் பேரவைக் கூட்டம் கடந்த 14 ஆம் தேதி தொடங்கியது.

சட்டப் பேரவைக் கூட்டம் 3 நாட்கள் நடைபெற்ற நிலையில், சனி, ஞாயிற்றுக்கிழமை 2 தினங்கள் சட்டப் பேரவைக்கு விடுமுறை விடப்பட்டது.

இந்நிலையில், தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியது. இன்று மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை மீதான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெறுகிறது.

கூட்டத் தொடரின் முதல் நாளான ஜூன் 14 அன்று, தமிழக சட்டப் பேரவையில் ஜிஎஸ்டி மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அமைச்சர் வீரமணி இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், இந்த மசோதா மீது இன்று விவாதம் நடைபெற உள்ளது. விவாதத்திற்கு பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட உள்ளது.

இந்த நிலையில், டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன், சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார். ஆண்டிப்பட்டி தொகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்காததைக் கண்டித்து வெளிநடப்பு செய்ததாக அவர் கூறினார்.

சுகாதாரத் துறை தொடர்பாக துணை கேள்வி கேட்க சபாநாயகர் அனுமதி மறுத்ததால் வெளிநடப்பு செய்துள்ளதாக எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன் வெளிநடப்பு செய்துள்ளார்.

இது குறித்த தனது கேள்விக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர் பதில் அளிக்கவில்லை என்றும் எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன் புகார் தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் இருந்து ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன் வெளிநடப்பு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.