மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் அண்மையில் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. ராமநாதபுரம் அரண்மனை அருகே ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த கூட்டத்தில் தமிழக அமைச்சர் மணிகண்டன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, டி.டி.வி.தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் குறித்து கடுமையாக சாடியிருந்தார். தினகரன் தரப்பினர் யாரேனும், அதிமுக கறைவேட்டி கட்டினால், அந்த வேட்டியை உருவி எறியுங்கள் என்றும், அதிமுக கறை வேட்டி கட்டுவதற்கும், அதிமுக கொடியை பயன்படுத்துவதற்கும் அதிமுகவினருக்கு மட்டுமே உரிமை உள்ளது என்றும் பேசியிருந்தார்.

தமிழகத்தில் வேட்டியை உருவிட புதிய அமைச்சரை நியமிக்க வேண்டும் என்று தினகரன் அணியின் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. உமாமகேஷ்வரி கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் அதிமுக (அம்மா) அணி சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விளாத்திக்குளம் எம்.எல்.ஏ. உமாமகேஷ்வரி கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர்,  தமிழகத்தின் தற்போதைய ஆட்சியாளர்கள் எந்த திட்டங்களையும் நிறைவேற்றவில்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் அமைச்சர் விவசாயிகளுக்கு பயிர்காப்பீட்டு தொகை வாங்கி தரமால் உள்ளனர். 

தினகரன் அணியினர் அதிமுக கறை வேட்டி கட்டினால், அதை உருவிட வேண்டும் என்கிறார். அதனால் தமிழகத்தில் வேஷ்டி உருவல் துறை உருவாக்கி, அதன் அமைச்சராக மணிகண்டனை நியமிக்க வேண்டும் என்று உமாமகேஷ்வரி கூறினார்.