என்னை அளவுக்கு அதிகமாக நாஞ்சில் சம்பத் புகழும்போதே, என்றாவது ஒருநாள் தூக்கி கீழே போட்டுவிடுவார் என நினைத்தேன் என தினகரன் கூறியுள்ளார்.

அதிமுகவை மீட்பதை இலக்காக கொண்டு செயல்பட்டு வரும் தினகரன், அதுவரை தேர்தல்களை சந்திப்பதற்கு அரசியல் அமைப்பு தேவை என்பதற்காக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளார்.

இந்நிலையில், தினகரன் தொடங்கிய இயக்கத்தின் பெயரில் அண்ணா மற்றும் திராவிடம் ஆகிய வார்த்தைகள் இடம்பெறாததால், தான் அந்த இயக்கத்தில் இருக்க விரும்பவில்லை எனக்கூறி நாஞ்சில் சம்பத், தினகரன் அணியிலிருந்து விலகியுள்ளார். தினகரனை புகழ்ந்து பேசிய நாஞ்சில் சம்பத், திடீரென அவர் அணியிலிருந்து விலகியதோடு தினகரனை கடுமையாக விமர்சித்தும் உள்ளார்.

நாஞ்சில் சம்பத் விலகியது மற்றும் அவரது விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக சென்னை அடையாறில் தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கறுப்பு-சிவப்பு-வெள்ளை கொடிக்கே எதிர்ப்பு தெரிவிக்கும் ஆட்சியாளர்கள், அமைப்பின் பெயரில் அண்ணா-திராவிடம் ஆகிய வார்த்தைகள் இடம்பெற்றால் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். அதுபோன்ற பிரச்னைகளை தவிர்ப்பதற்காகத்தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்று பெயர் வைத்தோம். ஜெயலலிதாவிடம் இருந்துதான் அண்ணா மற்றும் திராவிடத்தை கற்றுக்கொண்டோம். அந்த வகையில் அம்மா என்ற பெயருக்குள் அண்ணா, திராவிடம் ஆகியவை அடங்கிவிட்டதாகவே கருதுகிறோம்.

அதனால் நாஞ்சில் சம்பத் எதிர்ப்பது, ஜெயலலிதாவை அவமதிக்கும் வகையில் உள்ளது. அவர் வெகுநாட்களாகவே எங்கள் அணியினருடன் ஒட்டுவதில்லை. ஒருமுறை, பாஜக மாநில தலைவர் தமிழிசையை கடுமையாக விமர்சித்துவிட்டார். அப்போது, அப்படியெல்லாம் விமர்சிக்க வேண்டாமே என சம்பத்திடம் தெரிவித்தேன். அதுமுதலே அவர் ஒதுங்க தொடங்கிவிட்டார். எப்போது ஒட்டுமொத்தமாக விலகலாம் என காரணம் தேடிக்கொண்டிருந்த சம்பத், அமைப்பின் பெயரை காரணம் ஒதுங்கிவிட்டார் என தினகரன் தெரிவித்துள்ளார்.

மேலும் என்னை அளவுக்கு அதிகமாக நாஞ்சில் சம்பத் புகழும்போதே, என்றாவது ஒருநாள் தூக்கி கீழே போட்டுவிடுவார் என நினைத்தேன். அது நடந்துவிட்டது என தினகரன் பேசினார்.