dinakaran speak about navaneetha krishnan and vijila
தனது ஆதரவாளர்களாக இருந்த நவநீதகிருஷ்ணனும் விஜிலா சத்யானந்தும் தன்னிடம் சொல்லிவிட்டுத்தான் முதல்வர் பழனிசாமி அணிக்கு சென்றதாக தினகரன் தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்கான தினகரனின் போராட்டம் தோல்வியடைந்தது. அமைப்பு ரீதியாகவும் சட்டப்பேரவையிலும் பெரும்பான்மை ஆதரவை பழனிசாமி-பன்னீர்செல்வம் தலைமையிலான அணி பெற்றிருப்பதாகக்கூறி இரட்டை இலையை அவர்களுக்கே ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.
இரட்டை இலையை இழந்தாலும் முயற்சியையும் நம்பிக்கையையும் தளரவிடாத தினகரன், திருச்சியில் நேற்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தினார். திருச்சியில் அந்த கூட்டம் நடந்துகொண்டிருந்த வேளையில், அவரது ஆதரவு எம்பிக்களான நவநீதகிருஷ்ணன், விஜிலா சத்யானந்த் மற்றும் புதுச்சேரி எம்பி கோகுலகிருஷ்ணன் ஆகிய மூவரும் முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இரட்டை இலையையும் இழந்து தனது ஆதரவாளர்களையும் இழந்துகொண்டிருக்கும் வேளையில் கூட சற்றும் கலங்காமல் பதற்றப்படாமல், கூலாகவே செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிவருகிறார்.
திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை. கட்சி கொடியைத்தான் நாங்கள் பயன்படுத்துவோம். கட்சியின் கொடியை பயன்படுத்தக்கூடாது என தேர்தல் ஆணையத்தில் 84 பக்க தீர்ப்பில் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை என தெரிவித்தார்.
மேலும் தனது ஆதரவு எம்பிக்கள், முதல்வர் அணிக்கு சென்றது குறித்து கருத்து தெரிவித்த தினகரன், நவநீதகிருஷ்ணனும் விஜிலா சத்யானந்தும் தங்களை தகுதிநீக்கம் செய்துவிடுவார்களோ என்ற பயத்தில் பழனிசாமி அணிக்கு சென்றுள்ளனர்.
பழனிசாமியை சந்திக்க செல்வதற்கு முன் எனக்கு(தினகரனுக்கு) போன் செய்து, நீங்கள் இரட்டை இலை ஒதுக்கீட்டுக்கு எதிராக நீதிமன்றத்தில் தடை வாங்கியதும் நாங்கள் உங்களிடம் வந்துவிடுகிறோம் என கூறினர். இரண்டு இடத்திலும் சீட் போட்டு வைக்காமல் அவர்களிடத்திலேயே இருங்க என தெரிவித்துவிட்டேன் என்று தினகரன் படு கூலாக தெரிவித்தார்.
