எடப்பாடி பழனிசாமி அரசு நடத்தும் ஓராண்டு சாதனைக் கூட்டமா? தமிழகத்துக்கு வந்த சோதனைக் கூட்டமா? என்று ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்தது. ஓராண்டு நிறைவையொட்டி சென்னை
ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில், அமைச்சர்கள், கட்சி தொண்டர்கள் ஒன்று கூடி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவையொட்டி, பல்வேறு இடங்களில் சாதனை கூட்டம் நடைபெற்று வருகிறது.  ஓராண்டு சாதனைக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் உள்ளிட் பலர் கலந்து கொண்டனர். அப்போது நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்று ஓராண்டு சாதனை விழா குறித்து கட்சி தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்த சாதனை கூட்டம்
குறித்து எம்.எல்.ஏ. டிடிவி தினகரன் கூறும்போது,  அது சாதனைக் கூட்டம் இல்லை; தமிழகத்துக்கு வந்த சோதனைக் கூட்டம் என்றார்.

தஞ்சாவூர், பரிசுத்தம் நகரில் தங்கியுள்ள சசிகலாவை, டிடிவி தினகரன் சந்தித்தார். இதன் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அவர், எடப்பாடி அரசு ஓராண்டு சாதனைக்
கூட்டத்தை நடத்துகின்றனர். அது சாதனைக் கூட்டம் இல்லை. தமிழகத்துக்கு வந்த சோதனைக் கூட்டம் என்றார். எலிகள் கூடி நடத்திய விழா அது. அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அவர்களது குடும்பத்தில் உள்ளவர்களைப் பயனாளிகயாக உட்கார வைத்து கொண்டு சாதனை கூட்டத்தை நடத்துகின்றனர் என்று கூறினார்.

இந்த சாதனைக் கூட்டத்தால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. எலியான ஓ.பன்னீர்செல்வம், தன்னை யானையாக நினைத்துக் கொண்டிருக்கிறார். அவரை நினைத்து தமிழக மக்கள் நகையாடுகிறார்கள். இந்த ஆட்சி விரைவில் கவிழும். ஓராண்டு சாதனை பற்றி ஓ.பன்னீர்செல்வம் பேசுவது வேடிக்கையாக உள்ளது. கடந்த ஆண்டு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, எதிராக வாக்களித்த பன்னீர்செல்வம், செப்டம்பர் மாதம் கட்சியில் துணை முதலமைச்சராக பதவி பெற்றுக் கொண்டார். சாதனையைப் பற்றி இவர் பேசி வருவது வேடிக்கையாக உள்ளது.

சில விஷயத்துக்காக ஸ்லீப்பர் செல்கள் வெளியே வராமல் உள்ளனர். வாக்கெடுப்பு நடக்கும்போது கண்டிப்பாக எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களிப்பார்கள்
என்றார். மதவாத சக்திகளோடு எப்போதும் கூட்டணி வைக்க மாட்டோம். பொறுத்தவர்கள் பூமி ஆள்வார்கள் நாங்களும் ஆள்வோம் என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.