Asianet News TamilAsianet News Tamil

தினகரனின் கோரிக்கையை ஏற்குமா நீதிமன்றம்? இரட்டை இலையை கைப்பற்றுவாரா தினகரன்?

dinakaran seeks extra time case in high court madurai branch
dinakaran seeks extra time case in  high court madurai branch
Author
First Published Oct 5, 2017, 12:26 PM IST


இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு தொடர்பான விசாரணைக்கு தேவையான கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கேட்டு தினகரன் தொடர்ந்த வழக்கில் இன்று மதியம் 2 மணிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்குகிறது.

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு கட்சி உடைந்ததால் இரட்டை இலை சின்னம் மற்றும் கட்சியின் பெயரை தேர்தல் ஆணையம் முடக்கியது. சசிகலா மற்றும் பன்னீர்செல்வம் என இரண்டு அணிகளாக அதிமுக செயல்பட்டு வந்தது. 

பின்னர் முதல்வர் பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் அணிகள் இணைந்தபிறகு, பிரிந்த அணிகள் இணைந்துவிட்டதாக கூறி இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டனர். ஆனால் தினகரன் தலைமையில் தனி அணி செயல்பட்டுவருவதால், தங்கள் தரப்பு வாதங்களையும் கேட்க வேண்டும் என தினகரன் அணி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னம் தொடர்பாக கூடுதல் ஆவணங்களை செப்டம்பர் 29-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் இறுதி விசாரணை அக்டோபர் 6-ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவித்தது.

அதனடிப்படையில் முதல்வர் பழனிசாமி அணி சார்பில் கூடுதல் ஆவணங்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் பிரமாணப் பத்திரங்கள் ஆகியவை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஆனால் தினகரன் அணி சார்பில் கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க தேர்தல் ஆணையத்திடம் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது.

தினகரனின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டதை அடுத்து நீதிமன்றத்தை நாடினார் தினகரன். கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க கூடுதல் அவகாசம் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, இன்று மதியம் 2 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது. தினகரனுக்கு கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டால், கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க தினகரனுக்கு வாய்ப்பு கிட்டும்.

இல்லையேல், அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ள முதல்வர் பழனிசாமி அணிக்கே சின்னமும் கட்சி பெயரும் ஒதுக்கப்பட அதிகமான வாய்ப்பு ஏற்படும்.

தினகரனுக்கு கிரீன்சிக்னல் காட்டுமா நீதிமன்றம்?

Follow Us:
Download App:
  • android
  • ios