ஆர்கே நகர் இடைத் தேர்தல் நாளை மறுநாள் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து கட்சியினரும், வேட்பாளர்களை அறிமுகம் செய்து, களத்தில் குதித்தனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில், அதிமுக சசிகலா அணி வேட்பாளர் டிடிவி.தினகரனின் ஆதரவாளர்கள் பணம் பட்டுவாடா செய்வதாக ஏராளமான புகார்கள், தேர்தல் ஆணையத்துக்கு சென்றன. அதன்பேரில் 100க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். சுமார் ரூ.80 லட்சம் வரை பறிமுதல் செய்யப்பட்டன.

வாக்காளர்களுக்கு வெள்ளி காமாட்சி அம்மன் விளக்கு, எவர் சில்வர் குடம், தட்டு, சேலை, வேட்டி உள்பட பல்வேறு பரிசு பொருட்களும் வினியோகம் செய்யப்பட்டன. அவற்றையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

குறிப்பாக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி, முன்னாள் எம்பி சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் ஆகியோரது வீட்டில் வரிமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது பலகோடி மதிப்புள்ள ஆவணங்களும், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்கான ஆவணங்களும் சிக்கியது. இதுதொடர்பான விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று இரவு, ஆர்கே நகர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதுகுறித்து தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன் கூறியதாவது:-

தேர்தலை நிறுத்த வருமான வரித்துறையினர் சென்று புகார் அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தமிழகத்துக்கு மிகப்பெரிய தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் ரத்து மூலம் தமிழகத்துக்கு பெரிய கலங்கத்தை ஏற்படுத்தியுள்ளனர் என்பது என்னுடைய சொந்த கருத்து. அதற்கு பொறுப்பேற்று அமைச்சர்கள் தானாக முன்வந்து ராஜினாமா செய்ய வேண்டும். தமிழக அரசை கலைக்க வேண்டும்.

அ.தி.மு.க. தற்போது 3, 4 துண்டுகளாக சிதறி கிடக்கிறது. எனவே ஆட்சியை கலைத்து விட்டு தமிழகத்தில் நல்லாட்சி கொண்டு வரும் நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.