அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முன்றாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி இருக்கும் நிலையில், அதில் எதிரியையும் துரோகியையும் ஒரு சேர வீழ்த்துவோம் என குறிப்பிடுள்ளார். கடித்தில் தினகரன் கூறியிருப்பதாவது:

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித் தலைவி அம்மாவின் அடியொட்டி வந்த லட்சோபலட்சம் தொண்டர்களின் உணர்ச்சிப் பிரவாகத்தில், நியாயத்தின் சுடரொளியாக, அதர்மத்தை அகற்றி, தர்மத்தை நிலைநாட்டிட இரண்டாண்டுகளுக்கு முன் உங்களால் உருவாக்கப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வெற்றிகரமாக மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. நமது இயக்கம் முத்தான மூன்றாம் ஆண்டில் கால் பதித்திருக்கும் இந்த நல்ல நேரத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் நீங்கா நினைவுகள் காற்றலைகளில் கலந்திருக்கும் சென்னை, ராயப்பேட்டையில் நமக்கு புதிய தலைமைக் கழக அலுவலகம் அமைந்துள்ளது. அம்மாவின் ஆசியோடு இங்கிருந்து சட்டமன்றத் தேர்தல் வேலைகளைப் புத்தம் புது உற்சாகத்தோடு தொடங்கி இருக்கிறோம். பதிவு பெற்ற கட்சியாக ஒரே சின்னத்தில், வெற்றிச்சின்னத்தில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போகிறோம்.

அதற்கு முன்னோட்டமாக குடியாத்தம், திருவொற்றியூர் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் வாகை சூடும் வகையில் நம்முடைய பணிகள் அமையவிருக்கின்றன. அவற்றில் நாம் பெறுகிற வெற்றி, சட்டமன்ற பொதுத் தேர்தலில் மக்கள் மனங்களை வென்று அம்மாவின் உண்மையான ஆட்சியை மீண்டும் தமிழ்நாட்டில் உருவாக்கப் போகிறது. ஆயிரமாயிரம் கைகள் மறைத்து நின்றாலும் அம்மாவின் உண்மைத் தொண்டர்களின் உணர்வையும், எழுச்சியையும் அத்தனை எளிதில் யாராலும் அடக்கிவிட முடியாது என்பதற்கு நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நாம் பதித்த முத்திரையும், கடந்த பிப்ரவரி 24-ந்தேதி திருநெல்வேலி கங்கைகொண்டானில் கடல் அலையைப் போல திரண்ட தீரர் கூட்டமுமே சாட்சியாக அமைந்தது. அன்றைய தினமும், அதன் தொடர்ச்சியாகவும் நம் அம்மாவின் பிறந்த நாளை நாம் கொண்டாடி வரும் அளவுக்கு உணர்வோடும், உரிமையோடும், உண்மையோடும் வேறு யாரும் கொண்டாடிடவில்லை என்பதற்கு தமிழகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கும் கழக நிகழ்ச்சிகளே ஆதாரம்.

வெறிச்சோடும் சென்னை ஏர்போர்ட்..! 11 நாட்களில் 90 விமானங்கள் ரத்து..!

தேர்தல் நெருங்குவதால் நாளொரு வே‌ஷம் போடும் வேலைகளில் பழனிசாமி கூட்டம் மேற்கொண்டிருக்கிறது. ஆயிரம் ஆயிரம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டு, எட்டுவழிச் சாலையை கொண்டுவரத் துடிக்கும் பழனிசாமி, இப்போது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம் என்ற புதிய அரிதாரம் பூசியிருக்கிறார். இதேபோல மக்களை ஏமாற்றுவதில் திராவிட முன்னேற்றக் கழகம் தனது பங்கையும் ஆற்றிக் கொண்டுதான் இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு மட்டுமின்றி இந்தியாவுக்கே தீங்கிழைத்த பல திட்டங்களை முன்னெடுத்தது தீயசக்தி தி.மு.க. கூட்டம்தான். டெல்டா பகுதியில் எரிவாயுத் திட்டங்களுக்கு ஒப்பந்தம் போட்டு விட்டு இன்று அதை எதிர்க்கும் வேலையை செய்கிறார்கள்.

தமிழகத்தில் மீண்டும் உண்மையான அம்மாவின் ஆட்சியைக் கொண்டு வருவதற்கு நம்முடைய உழைப்பை ஒருமுகப்படுத்துவோம். தமிழகத்திற்கு தீங்கிழைக்கும் எதிரிகளையும், துரோகிகளையும் ஒருசேர வீழ்த்திடுவோம். அதற்கான உறுதியை ஒவ்வொருவரும் எடுத்துக் கொண்டு, அம்மா கற்றுத்தந்த துணிவோடும் நம் தாயின் போர்க்குணத்தோடும், அம்மா வளர்த்த சிங்கக் குட்டிகளாக லட்சியப்பாதையில் தொடர்ந்து பயணிப்போம், வென்றிடுவோம்.

இவ்வாறு தினகரன் தனது கடித்தில் குறிப்பிட்டுள்ளார்.

திருப்பதியில் இலவச தரிசனம்..! தேவஸ்தானத்தின் அதிரடி திட்டம்..!