dinakaran retaliates h raja and kamal

சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 8ம் தேதி தொடங்க உள்ள நிலையில், பேரவையில் ஸ்லீப்பர் செல்களுக்கு பேட்டரி போடப்படும் என தினகரன் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகரில் ஆளுங்கட்சியான அதிமுகவை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற தினகரன், முதன்முறையாக சட்டமன்றத்துக்கு செல்கிறார். அதிமுகவிலிருந்து ஓரங்கட்டப்பட்ட பிறகு அதிமுகவையே எதிர்த்து வெற்றி பெற்றுள்ள தினகரன், சட்டமன்றத்தில் ஆட்சியாளர்களுக்கு சவாலாக திகழ்வார் என்ற கருத்து பரவலாக உள்ளது.

இந்நிலையில், தினகரனின் வெற்றியையும் தினகரனையும் ஆட்சியாளர்களும் தமிழக பாஜக தலைவர்களும் விமர்சித்து வருகின்றனர். சட்டமன்றத்திற்குள் செல்வதற்குள் குக்கர் வெடித்துவிடும் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா விமர்சித்திருந்தார். 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஜனநாயகத்திற்கே ஆகப்பெரிய களங்கம். தினகரனின் வெற்றி வாங்கப்பட்ட வெற்றி. அதற்கு மக்களும் உடந்தை என கமல் விமர்சித்திருந்தார்.

எச்.ராஜா, கமல் ஆகியோரின் கருத்துக்கு தினகரன் பதிலடி கொடுத்துள்ளார். தூத்துக்குடியில் அவரது ஆதரவாளர் இல்ல விழாவிற்கு சென்றுள்ள தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, ஆர்.கே.நகர் மக்கள் பணத்திற்காக ஓட்டு போட்டதாகக் கூறி ஆர்.கே.நகர் மக்களை இழிவுபடுத்தியுள்ளார் கமல். இதிலிருந்தே கமல் யார் என்பதை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர். குக்கர் வெடித்துவிடும் என எச்.ராஜா கூறியிருக்கிறார். குக்கர் வெடிக்காது. அப்படியே வெடித்தாலும் சிதறுவது அவர்களாகத்தான் இருக்கும். சட்டப்பேரவையில் ஸ்லீப்பர் செல்களுக்கு பேட்டரி போடப்படும் என தினகரன் தெரிவித்தார்.