dinakaran raise question Rajini Does not he seen a video release
காவல்துறை உடையில் இருந்தவர்களே தீ வைத்த வீடியோ வந்ததே, அப்போது அமெரிக்காவில் சூட்டிங்கில் இருந்தாரா? என்று தினகரன் ரஜினியை கிழித்து தொங்கவிட்டுள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்துவிட்டு சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, “ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் நடத்திய போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்ததால்தான் வன்முறை வெடித்தது. காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சென்னை சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஆர்.கே.நகர் எம்எல்ஏ தினகரன், “தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டம் என்பது பொதுமக்களின் எழுச்சிப் போராட்டம். காவல் துறையினர் மீது கல்லெறித் தாக்குதல் நடத்தியதால்தான் அவர்கள் திருப்பிச் சுட்டார்கள் என்று ஒருவர் கூறுகிறார். காவல் துறையைப் பற்றி இவர்களுக்குத் தெரியவில்லை. காவல் துறையில் எத்தனை பேர் நடுநிலையோடு உள்ளனர்?

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டதாகவும் அவர் கூறுகிறார். ஒரு வீடியோ வெளியானதே அதை அவர் பார்க்கவில்லையா. அப்போது அமெரிக்காவில் இருந்தாரா, சினிமா சூட்டிங்கில் இருந்தாரா? ஆட்டோ, பைக்கிற்கு போலீஸ் உடையில் இருந்தவர்களே தீ வைத்த வீடியோ வந்ததே, அதற்கு இதுவரை காவல்துறை மறுப்பே சொல்லலயே. காந்தியே வந்து காக்கி சட்டை போட்டது போல இவர் பேசுகிறார்.
சினிமாவில் வேண்டுமானால் அதெல்லாம் நடக்கலாம். எல்லா துறையிலும் கறுப்பு ஆடுகள் உள்ளன. காவல்துறை மக்களை காக்க வேண்டிய துறை, அப்படித்தான் இப்போது உள்ளதா? 100 நாள் போராட்டம் நடத்திய மக்கள் பிரச்சினையை கவனிக்காத நிர்வாகம், அரசின் கையாலாகத்தனம்தான் இந்த சம்பவத்திற்கு காரணமே தவிர மக்கள் கிடையாது என ரஜினிக்கு பதிலடி கொடுத்துள்ளார் தினகரன்.
