சிறையில் இருந்து வெளியே வந்த உடன் அனைத்து பொறுப்புகளையும் தங்களிடமே ஒப்படைத்து விடுவதாக சசிகலாவிடம் தினகரன் அளித்த வாக்குறுதியை ஏற்க மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த கையோடு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளராக தனக்குத்தானே முடிசூட்டிக் கொண்டார் தினகரன். அவர் பொதுச்செயலாளராக முடி சூட்டிக் கொண்டது மன்னார்குடி உறவுகளை பெரிய அளவில் அதிர்ச்சி அடைய வைக்க வில்லை. ஆனால் பொதுச் செயலாளராக இருந்த சசிகலாவிற்கு அவர் எந்தப் பொறுப்பையும் கொடுக்காமல் இந்த முடிவை எடுத்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

 

இந்த நிலையில்தான் பெங்களூரு சிறைக்கு சென்று சசிகலாவை சந்தித்து பேசிவிட்டு திரும்பியுள்ளார் தினகரன். தினகரனை சந்திக்க சசிகலா அனுமதித்ததை பெரிய விஷயம் என்று கூறுகிறார்கள் மன்னார்குடி உறவுகள். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தான் பொதுச்செயலாளராக உள்ளதாக பெங்களூர் புகழேந்தி மூலம் ஏற்கனவே சசிகலாவிற்கு தினகரன் தகவல் அனுப்பியிருந்தார். ஆனால் அதற்கு சாதகமான பதில் ஏதும் வராத நிலையிலேயே தினகரன் தனக்குத்தானே பொதுச்செயலாளராக முடி சூட்டி இருந்தார். 

இதனால் தினகரன் மீது கடும் அதிருப்தியில் இருந்த சசிகலா அவரை சந்திக்க விரும்பவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் சசிகலா தினகரன் இடையே பிரச்சனை என்று பேச ஆரம்பித்தால் அது அதிமுக தரப்பிற்கு சாதகமாகி விடும் என்று அஞ்சி சரி தினகரன் என்னதான் சொல்கிறார் பார்ப்போம் என்று அவரை வரச் சொல்லுங்கள் என்று சசிகலா கூறியதாகச் சொல்லப்படுகிறது. 

இதனைத் தொடர்ந்து பெங்களூர் சிறையில் சசிகலாவை சந்தித்த தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை கட்சியாக மாற்ற வில்லை என்றால் அடுத்து சில வருடங்களுக்கு எந்த ஒரு அரசியல் ரீதியிலான முடிவையும் நம்மால் எடுக்க முடியாது என்று எடுத்துக் கூறியுள்ளார். சிறையிலிருக்கும் தங்களை பொதுச்செயலாளராக வைத்துக் கொண்டு வெளியில் அனைத்து முடிவுகளையும் சுதந்திரமாக  கட்சியை வளர்ப்பது என்பது குதிரைக் கொம்பாகி விடும் இன்றும் தினகரன் சசிகலாவிடம் விளக்கமாக எடுத்துக் கூறியுள்ளார். 

மேலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்பது கட்சியாக மாறிய பின்னர் அந்தக் கட்சியில் பொறுப்பில் இருப்பவர் களால் அதிமுகவை உரிமை கோர முடியாது என்பதால் தங்களை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து ஒதுக்கி வைப்பதை தவிர வேறு வழியில்லை என்றும் தினகரன் சட்டப்பூர்வ அம்சங்களை எடுத்து சசிகலா முன்வைத்துள்ளார். தினகரன் இவை அனைத்தையும் தான் கூறுவார் என்று முன்பே தெரியும் என்பதால் அனைத்தையும் சசிகலா கேட்டுக் கொண்டதோடு சரி பெரிய அளவில் எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை. 

இறுதியாக சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு கணக்கு வழக்குகளை ஒப்படைப்பதை போல் தன்னிடம் இருக்கும் அனைத்து பொறுப்புகளையும் அதிகாரத்தையும் தங்கள் காலடியில் வைத்து விடுவதாகவும் அதன்பின் தாங்கள் எடுக்கும் முடிவுக்கு கட்டப்படுவதாகவும் உணர்ச்சிப்பெருக்குடன் கூறியுள்ளார் தினகரன். இதே போன்று ஏராளமான உறுதிமொழிகளை தன் வாழ்நாளில் கேட்டு ஏமாந்து போன சசிகலா இந்த முறையும் இதனை ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதால் தலையை மட்டும் அசைத்துவிட்டு தன்னுடைய அறைக்கு சென்றதாக கூறுகிறார்கள். தினகரனிடம் இருந்து சசிகலா சென்ற முறையிலேயே அவரது வாக்குறுதியை அவர் கேட்கவில்லை என்று தருவதாக மன்னார்குடி உறவுகள் பேச ஆரம்பித்துள்ளனர்.