அதிமுக துணை பொது செயலாளர் டிடிவி.தினகரன், செய்தியாளர்களை சந்தித்தபோது, கட்சியின் நலன் சார்ந்து எனது பணி இருக்கும் என கூறினார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது.

வரும் 4ம் தேதி, அனைத்து பத்திரிகையாளர்களையும் சந்திப்பேன். அப்போது, எனது சுற்றுப்பயணம் குறித்த தகவல்களை தெரிவிப்பேன்.

மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டத்தில் உள்ள அதிமுக நிர்வாகிகளை சந்திக்க முடிவு செய்துள்ளேன். அதன்படி அனைத்து தொண்டர்களையும் சந்திப்பேன். முன்னதாக வரும் 5ம் தேதி மாவட்ட நிர்வாகிகளையும், அதிமுக தலைமை அலுவலகத்தில் சந்திப்பேன்.

வரும் உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தலில் கட்சியை பலப்படுத்துவதே எனது பணியாக இருக்கும். தற்போது பிரிந்துள்ள இரு அணிகளும் இணைய வேண்டும் என்பதே எனது விருப்பம். இதற்காக 60 நாட்கள் அவகாசம் கொடுத்தேன். ஆனால், இதுவரை எந்த முடிவு எடுக்காமல், அமைச்சர்களும் காலம் கடத்தி வருகின்றனர்.

இதனால், இனி கட்சியை நானே வழி நடத்த முடிவு செய்துவிட்டேன். நான் ஏற்கனவே சொன்னதுபோல், எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி நல்லமுறையில் நடந்து வருகிறது. அவரே முதல்வராக பணியாற்றுவார். இதில், எந்த மாற்றமும் ஏற்படாது.

அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் கூறிய கருத்துக்கு நான் எந்த பதிலும் கூற விரும்பவில்லை. அவரை நான் எனது நல்ல நண்பராகவே பார்க்கிறேன். எனது பணி கட்சியின் நலன் சார்ந்தே இருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.