dinakaran ordered pugazhendhi to organize a huge meeting

அதிமுகவில் எடப்பாடி அணி, பன்னீர் அணி என இரண்டு அணிகள் போட்டி போட்டு கொண்டு கூட்டங்கள் நடத்தி வருகின்றன.

ஆனால், சத்தம் இல்லாமல் தினகரனுக்கு ஆதரவாக கூட்டங்களையும், போராட்டங்களையும் நடத்தி தினகரன் அணியை வலுவாக்கி வருகிறது நாஞ்சில் சம்பத் மற்றும் புகழேந்தி டீம். இவர்களுடன் நடிகர் குண்டு கல்யாணமும் இணைந்துள்ளார்.

அடிக்கடி டெல்லி சென்று தமிழக அரசியல் நிலவரங்களை அவ்வப்போது தினகரனுக்கு கூறிவரும் புகழேந்தி, அவரது வழக்கறிஞர்களுடனும் ஆலோசனை நடத்தி வருகிறார்.

அண்மையில் தினகரனை சந்தித்து, கள நிலவரங்களை விளக்கிய புகழேந்தி, அவருக்கு ஆதரவாக நடத்தும் கூட்டங்களையும், அதற்கு மக்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பு குறித்தும் விரிவாக கூறியுள்ளார்.

அப்போது, என்னை கட்சியில் இருந்து அவர்கள் நீக்கவில்லை. நீக்கவும் முடியாது. நானேதான் ஒதுங்கி கொள்வதாக அறிவித்தேன். அதனால், எடப்பாடியை பற்றி கூட்டங்களில் அதிகம் விமர்சிக்க வேண்டாம் என்று தினகரன் கூறி இருக்கிறார்.

அப்போதுதான், கட்சியும், ஆட்சியும் நமது கட்டுப்பாட்டில் இருப்பது மக்களுக்கு தெரியவரும். நான் விரைவில் வெளியில் வந்து விடுவேன். அதற்குள், நீங்கள் எவ்வளவு ஆதரவை திரட்ட முடியுமோ அந்த அளவுக்கு திரட்டுங்கள்.

கட்சியை ஒழுங்காக நடத்தட்டும் என்றுதான் நான் ஒதுங்கினேன். ஆனால், அவர்கள் ஒழுங்காக நடத்தவில்லை. அதனால் மீண்டும் வந்திருக்கிறேன் என்று மக்களிடம் நாம் கூறலாம்.

எனவே, நான் சிறையில் இருந்து வெளியில் வந்ததும், கலந்து கொள்ளும் கூட்டம் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும். அதை கவனத்தில் கொண்டு செயல்படுங்கள் என்று புகழேந்தியிடம் தினகரன் கூறி உள்ளார்.

அப்படியே ஆகட்டும் என்று தினகரனிடம் கூறிய புகழேந்தி, பெங்களூரை மறந்து, சென்னையிலேயே ரூம் போட்டு, தினகரனுக்கு கூட்டம் சேர்க்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் என்று அதிமுகவினர் கூறுகின்றனர்.