dinakaran met sasikala in bengaluru jail
ஆர்.கே.நகரில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற தினகரன், பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 40707 வாக்குகள் வித்தியாசத்தில் ஆளுங்கட்சியான அதிமுக வேட்பாளர் மதுசூதனனை வீழ்த்தி தினகரன் அபார வெற்றி பெற்றார். வாழ்வா சாவா போட்டியில் அதிமுகவை வீழ்த்தி அரசியல் இருப்பை உறுதி செய்துள்ளார் தினகரன்.
அதிமுக அரசு, மத்திய பாஜக அரசு, தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் பல்வேறு நெருக்கடிகளையும் மீறி அபார வெற்றி பெற்ற தினகரனுக்கு, அதிமுக எம்.எல்.ஏக்கள் சிலரும் அமைச்சர்கள் சிலரும் வாழ்த்து தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த தகவல் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு கலக்கத்தை ஏற்படுத்தியது.
வரும் ஜனவரி 8ம் தேதி சட்டசபை கூடுகிறது. சட்டசபைக்கு முதல்முறையாக செல்லும் தினகரன், ஆட்சியாளர்களுக்கு எதிராக பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக வலுவான குரலை எழுப்ப வாய்ப்புள்ளது.
ஆர்.கே.நகரில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டியிட சசிகலா மறுப்பு தெரிவித்ததாகவும் அவரை சமாதானப்படுத்தியே தினகரன் தேர்தலில் நின்றதாகவும் தகவல்கள் உலவின. இந்நிலையில், ஆர்.கே.நகரில் போட்டியிட்டு சொன்னபடியே வெற்றியும் பெற்ற தினகரன், வெற்றி களிப்பில் சசிகலாவை சந்தித்துள்ளார். முதல்முறையாக சட்டசபைக்குள் செல்லும் தினகரன், அதிமுக அரசுக்கு எதிராக எவ்வாறு செயல்படப் போகிறார் என்பதை கூட்டத்தொடரின் போதுதான் பார்க்க வேண்டும்.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்து தினகரன் வாழ்த்து பெற்றார். மேலும் சட்டசபையில் அதிமுகவிற்கு எதிராக செயல்படுவது குறித்தும் எப்படிப்பட்ட அணுகுமுறையை பின்பற்றுவது என்பது குறித்தும் சசிகலாவுடன் தினகரன் ஆலோசித்ததாக தெரிகிறது.
