ஆர்.கே.நகர் பக்கம் காதை கூர்மையாக்கி கேட்கும் அரசியல் பார்வையாளர்கள் ’குக்கர் சப்தம் கொஞ்சம் பலமாகவே கேட்கிறது’ என்கிறார்கள். இது ஆளும் வர்க்கத்துக்கு வயிற்றில் புளியை மட்டுமல்ல உப்பு, மஞ்சள், காயம் எல்லாவற்றையும் சேர்த்தே கரைத்திருக்கிறது. 

தினகரனை கட்சியிலிருந்து கழற்றிவிட அ.தி.மு.க. அமைச்சரவை ஆகாச வித்தைகளையெல்லாம் காட்டிக் கொண்டிருந்தாலும் கூல் அண்டு சிம்பிளாய் தனி ஆவர்த்தனம் செய்து கொண்டிருக்கிறார் தினகரன். அணி மாறிவிட்ட எம்.பி.க்கள், ஏதோ சில காரணங்களால் சத்தத்தை குறைத்துக் கொண்ட நாஞ்சில் சம்பத், அடிபட்டு ஆஸ்பத்திரியிலிருக்கும் புகழேந்தி என்று அவரது பரிவாரம் பலமிழந்துவிட்டாலும் கூட மனிதர் மனதில் எந்த கவலையுமில்லை. 

டி.ஆர். போல் அஷ்டாவதானியாய் நின்று விளையாடுகிறார் சிங்கிளாய். 

இந்நிலையில் ஆர்.கே.நகரில் போட்டியிடும் தினகரனுக்கு அவரது பழைய சின்னமான தொப்பி மறுக்கப்பட்டு குக்கர் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் தினகரனின் தோல்வி இன்னும் அதிகமாக உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது என அமைச்சரவை ஆனந்தப்பட, இவரோ ‘சோப்பை ஒளிச்சு வெச்சுட்டா நிச்சயதார்த்தம் நின்னுடுமா பாஸ்?’என்று கிண்டலாய் கேட்டபடி பிரச்சார பணியில் பிஸியாகிவிட்டார். 

ஆளுங்கட்சி எனும் அசுர பலத்தோடு அமைச்சர்களின் பிரச்சாரமும் சேர்ந்து நிற்கிறது அ.தி.மு.க.வுக்கு! பத்து கட்சி கூட்டணியோடு  அரசின் மீதான வெறுப்பும் கைகொடுக்கிறது தி.மு.க.வுக்கு. ஆனால் ஒண்டியாய் நிற்கும் தினகரன் இவர்களுக்கெல்லாம் டஃப் கொடுப்பதுதான் அழகான ஆச்சரியமே. 

குறுகிய நாட்களுடன் பிரச்சார காலத்தின் முதல்வாரம் முடிவடைந்திருக்கிறது. இப்போதைக்கு நடத்தப்பட்டிருக்கும் சர்வேயில் முந்தும் ’அ.தி.மு.க., சின்ன இடைவெளியில் பிந்தும் தி.மு.க.’ என்று சிலர் ரைமிங்காக கருத்துக் கணிப்பு வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் டைமிங் இருக்கும் நிலையில் தினகரன் மளமளவென முன்னேறி வருவதாக உளவுத்துறை எடுத்திருக்கும் ஒரு ரிப்போர்ட் சொல்லியிருக்கிறதாம் அரசுக்கு. நிச்சயமாகவே இது ஒரு ஷாக் என்கிறார்கள். 

தினகரனின் எளிதான அப்ரோச்மெண்ட், ஆயிரம் பிரச்னைகள் துரத்தியடித்தாலும் கைவிடாத நம்பிக்கை என்று நேர்மறை குணத்தின் தோற்றமாய் அவரை இளம் வாக்காளர்கள் பார்க்கிறார்கள் என்கிறார்கள். எப்போதும் ஓவராய் ஒதுக்கப்படுபவனை பார்த்து பொதுக்கூட்டம் பாவப்படும்! அதேதான் தினகரனுக்கு நடக்கிறது என்கிறார்கள்.

அந்த வகையில் குக்கர் சப்தம் சற்று அதிகமாகவே கேட்கிறதாம் ஆர்.கே.நகரில்.
கேவலப்படுத்தி, கேவலப்படுத்தி கடைசியில நாமளே அவரை ஹீரோவாக்கிட்டு இருக்கிறோமோ ஆர்.கே.நகர்ல? என்று புலம்புகிறார்களாம் அமைச்சரவையினர். 

தனக்கு ஒரு மாஸ் உருவாவது தினகரனுக்கு புரிந்திருந்தாலும் கூட, தான் ஜெயிப்போம் என்று எந்த நம்பிக்கையுமில்லை அவருக்கு. அவருடைய ஒரே குறிக்கோளே அ.தி.மு.க.வின் வெற்றி வித்தியாசத்தை மிக மோசமாக குறைப்பதுதான்.