dinakaran is very confident in his victory in rk nagar by election
ஆர்.கே.நகரில் யார் போட்டியிட்டாலும் தனது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த ஓராண்டாக காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுத்துள்ள அதிமுக, ஆளும் கட்சியாக தங்களின் வலிமையை நிரூபிக்க போராடுகிறது. அதிமுக அரசின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டனர் என்று காட்டுவதற்காக வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற முனைப்புடன் திமுக களமிறங்கியுள்ளது.
இரட்டை இலை ஓபிஎஸ்-இபிஎஸ் அணியிடத்தில் இருந்தாலும் தொண்டர்கள் மற்றும் மக்களின் ஆதரவு எங்களுக்குத்தான் என்று நிரூபித்து மீண்டும் கட்சியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்ற முனைப்புடன் தினகரன் களம் காண்கிறார்.
இதற்கிடையே விஷால் என்ன நோக்கத்திற்காக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார் என்பதே தெரியவில்லை என அரசியல் விமர்சகர்கள் கூறினாலும், மக்களின் அடிப்படை பிரச்னையை தீர்ப்பதற்காக நிற்கிறேன் என கூறி அவரும் களமிறங்குகிறார். இன்று மதியம் அவர், தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.
பாஜக சார்பில், ஆர்.கே.நகரில் போட்டியிடும் கரு.நாகராஜனும் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவும் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
இப்படியாக பலமுனைப்போட்டி நிலவினாலும், கடுமையான போட்டி என்பது திமுக, அதிமுக, தினகரன் இடையே இருக்கும் என்றுதான் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், ஆர்.கே.நகரில் யார் போட்டியிட்டாலும் தன் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என மிகவும் நம்பிக்கையுடன் தெரிவித்தார். மேலும், புயல் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்காததால்தான் மீனவர்கள் கடுமையான பாதிப்புகளை சந்திக்க நேரிட்டது எனவும் விமர்சித்தார்.
