Dinakaran is a magic deer! Interview with Panneerselvam

ஆர்.கே.நகரில் மாயாஜாலம் செய்து தினகரன் வெற்றி பெற்றதாகவும், தினகரன் ஒரு மாயமான் என்றும் அவரை நம்பி சென்றவர்களுக்கு ராமாயணத்தில் ஏற்பட்ட நிலைமைதான் ஏற்படும் என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தோல்வி குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினர். இதன் பின்னர், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசினார். 

அதிமுகவுக்கு தோல்வி என்பது நிரந்தரமல்ல என்றும், தோல்வியும் வெற்றியும் மாறி மாறி வரும் என்றார். ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி தேர்தலை அதிமுக எப்போதுமே சந்தித்ததில்லை. ஆர்.கே.நகர் மக்களை, டிடிவி தினகரன் ஏமாற்றி பெற்ற வெற்றி என்று கூறினார்.

ஆர்கே.நகரில் வாக்காளர்கள் பத்தாயிரம் ரூபாய் கேட்டு அலைந்து கொண்டிருப்பதாகவும், பணப்பட்டுவாடா குறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறினார். 20 ரூபாய் நோட்டை வைத்துக் கொண்டு, தினகரன் வீட்டு வாசல் முன்பு மக்கள் காத்து கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

டிடிவி தினகரன் அரசியலுக்க வருவதற்கு 18 வருடங்களுக்கு முன்பாகவே தான் அரசியலுக்கு வந்துள்ளேன் என்றார். அதிமுகவின் உண்மையான தொண்டனாக இருந்திருந்தால் மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவை அவர்கள் வெளியிட்டிருக்க மாட்டார்கள். நோய் தொற்று ஏற்படும் என்று கூறியதாலேயே நான் உட்பட அமைச்சர்கள் பலர் ஜெயலலிதாவை மருத்துவமனையில் சந்திக்கவில்லை. 

ஆர்.கே.நகர் தேர்தலில் அதிமுக தோல்வி அடையவில்லை. மக்களை ஏமாற்றி மாயாஜாலம் செய்து தினகரன் வெற்றி பெற்றுள்ளார். எங்கள் பக்கம் இருப்பவர்கள் யாரும் தினகரன் பக்கம் செல்லவில்லை. தினகரன் ஒரு மாயமான். தினகரனை நம்பிச் சென்றவர்களுக்கு ராமாயணத்தில் ஏற்பட்ட நிலைமைதான் ஏற்படும்.

2ஜி அலைக்கற்றை வழக்கின் தீர்ப்பில் முதன் முதலில் வாழ்த்து சொன்னது தினகரன். இந்த இயக்கத்துக்கு அவர் எவ்வளவு பெரிய துரோகத்தை செய்து வருகிறார் என்பது இதன் மூலம் தெரியும்.

கட்சிக்கு பின்னடைவு ஏற்படும்போது எப்படி செயல்பட வேண்டும் என்பதை எங்கள் தலைவர்கள் கூறியுள்ளனர். அதன்படி செயல்படுவோம். ஜெயலலிதாவின் வாரிசு தினகரன் என்று தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். அவர் எதற்காக கூறினார் என்று தெரியவில்லை. கட்சிக்கு வாரிசு கிடையாது. எனக்கு வாரிசு தமிழக மக்கள்தான் என்று ஜெயலலிதா கூறியிருந்தார். எனவே ஜெயலலிதாவின் வாரிசு என்று யாரும் இல்லை. தினகரனை வாரிசு என்றும் கூற முடியாது என்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.