dinakaran is a dictator. ready to change 5 minister ops...
அதிமுக துணைப்பொதுச்செயலாளராக உள்ள டி.டி.வி தினகரன் சர்வாதிகாரி போல் செயல்படுவதாகவும், 5 அமைச்சர்கள் ஓ.பி.எஸ் அணியில் இணைய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு சசிகலா அணி ஓ.பி.எஸ் அணி என அதிமுக இரண்டாக உடைந்தது. அப்போது ஓ.பி.எஸ்க்கு அதரவு தெரிவித்து 11 எம்.எல்.ஏக்களும் 12 எம்.பிகளும் சசிகலா தரப்பை விட்டு வெளியேறினர்.
மேலும் முன்னாள் அமைச்சர்களும் மூத்த நிர்வாகிகளும் ஓ.பி.எஸ்க்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்களின் ஆதரவும் இளைஞர்களின் ஆதரவும் ஓ.பி.எஸ்க்கு பெருக ஆரம்பித்தது.
இதனிடையே ஓ.பி.எஸ் காபந்து முதலமைச்சராக இருந்தபோது ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை அமைக்கப்படும் என தெரிவித்தார்.
இதனால் அதிமுக தொண்டர்களிடையே எழுச்சி கிளம்பியது. பின்னர், ஓ.பி.எஸ் வீட்டு வாசல் அன்பு நெருக்கடியில் கூட்டம் பெருகியது.
மேலும் எம்.பி மைத்ரேயன் தலைமையில் ஓ.பி.எஸ் ஆதரவு எம்.பிக்கள் டில்லி சென்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து ஜெயலாலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
வரும் 8 ஆம் தேதி ஜெ. மரணத்தில் நீதி விசாரணை அமைக்க வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஓ.பி.எஸ் உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்துள்ளார்.
ஓ.பி.எஸ் தரப்பு சசிகலா அணிக்கு அடுத்தடுத்து பல நெருக்கடிகளை கொடுத்து வருவதால் சசிகலா துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் விட்டு சென்ற டி.டி.வி தினகரன் திணறி வருகிறார்.
இந்நிலையில், டி.டி.வி தினகரன் சசிகலா தரப்பு அதிமுக நிர்வாகிகளிடையே சர்வாதிகாரி போல் நடந்து வருவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
மேலும் வடக்கு மண்டலத்தில் 2 அமைச்சர்களும் தெற்கு மண்டலத்தில் 3 அமைச்சர்களும் ஓ.பி.எஸ் பக்கம் வர தயாராக இருப்பதால் அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிகிறது.
