Dinakaran inquiry on Who is directing the Minister Jayakumar

சசிகலா குடும்பத்தை எதிர்த்து பேசும் அளவுக்கு, எடப்பாடி அணியில் யாருக்கும் தைரியம் இல்லை என்பது தினகரனுக்கே நன்கு தெரியும். ஆனாலும் அமைச்சர் ஜெயக்குமாரின் பேச்சு, அவரை சற்று அதிகமாகவே யோசிக்க வைத்திருக்கிறது.

கடந்த தமிழ் புத்தாண்டு அன்று, மோடியின் கோபத்தை தணிக்கும் வகையில், கொஞ்சநாள் அரசியலில் இருந்து ஒதுங்கி இருங்கள் என்று, தினகரனை நேருக்கு நேராக கேட்டார் அமைச்சர் வேலுமணி.

அடுத்த சில நாட்களில், இரட்டை இலைக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும்போதே, சசிகலா குடும்பத்தை சேர்ந்த அனைவரையும் அரசியலில் இருந்து ஒதுக்கி வைப்பதாக, ஜெயக்குமார் தலைமையிலான அமைச்சர்கள் குழு அறிவித்தது.

அந்த பரபரப்பு அடங்குவதற்குள், அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த சசிகலா படங்கள் மற்றும் பேனர்களை அங்கிருந்து அகற்றி அடுத்த அதிர்ச்சியை கொடுத்தது அமைச்சர்கள் குழு.

இதை எல்லாம் பார்த்து, தினகரனுக்கு கடும் கோபம் வந்தாலும், மோடியின் கோபம், வழக்கு விசாரணை இழுத்தடிப்பு போன்ற நெருக்கடிகள் அவரை மவுனமாக இருக்க வைத்துவிட்டது.

ஆனால், திகார் சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த உடனேயே, தமது வேகத்தை காட்டிய தினகரன், சசிகலாவை சந்தித்து வந்த பிறகு எம்.எல்.ஏ க்களை தம் பக்கம் இழுக்குக்கும் அதிரடி வேலைகளை ஆரம்பித்து விட்டார்.

ஆனால், எதற்கும் அசராத அமைச்சர்கள் குழு, மீண்டும் ஜெயக்குமார் தலைமையில் ஒன்று கூடி, தினகரனை ஒதுக்கி வைப்பதாக எடுத்த நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக மீண்டும் அறிவித்தது.

அதன் பிறகுதான், தினகரன் சற்று யோசிக்க ஆரம்பித்தார், எடப்பாடி வைத்திருந்த நிதித்துறையை பிடுங்கி, நாம் ஜெய்குமாருக்கு கொடுத்தோம். இருந்தும் அவர் இப்படி நடந்து கொள்கிறார் என்று தமக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருத்தப்பட்டு இருக்கிறார்.

அப்போது, ஜெயக்குமார் தற்போது, திவாகரனின் முழு கட்டுப்பாட்டில் இருக்கிறார். நீங்கள் மீண்டும் அரசியலில் ஆதிக்கம் செலுத்துவதை பிடிக்காத திவாகரன், ஜெயக்குமாரை பின்னால் இருந்து இயக்குகிறார் என்று அவரது ஆதரவாளர்கள் சிலர் கூறி இருக்கின்றனர்.

ஆனால், மற்ற சிலரோ, மோடிக்கு வேண்டிய ஆடிட்டர் ஒருவரே, ஜெயக்குமார் தலைமையிலான அமைச்சர்கள் குழுவை, உங்களுக்கு எதிராக இயக்குகிறார் என்று கூறி இருக்கின்றனர்.

ஆதரவாளர்கள் கூறிய இரண்டு கருத்துக்களையும் தினகரானால் நிராகரிக்க முடியவில்லை. இருந்தாலும், ஜெய்குமாருக்கு பின்னால் இருந்து இயக்குபவர்களை எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறார் அவர்.

ஜெயக்குமார் தலைமையில், தமக்கு எதிராக செயல்பட்டு வரும் அமைச்சர்கள் குழுவை எப்படி கட்டுப்படுத்துவது? என்பது குறித்து, அவர் தமது ஆதரவாளர்களுடன் தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.

இதை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட முதல்வர் எடப்பாடி, எதற்கும் அசைந்து கொடுக்காமல் இருந்து வருகிறார். எம்.எல்.ஏ க்கள் பலரை, தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாலும், தினகரானால், ஆட்சியை கவிழ்க்க முடியாது என்பது அவரது நம்பிக்கை.

ஒருவேளை, அவர் ஆட்சியை கவிழ்க்க முற்பட்டால், மன்னார்குடி உறவுகளே அதற்கு எதிராக திரும்பும் என்பது, முதல்வர் எடப்பாடிக்கு தெளிவாக தெரியும் என்பதால், அவர் எதற்கும் கலங்காமல் இருக்கிறார் என்றும், தினகரன் ஆதரவாளர்கள் அவரிடம் கூறி உள்ளனர்.