Dinakaran in trouble after OPS meeting Prime Minister
பிரதமரை சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் கிடைப்பதே பெரிய விஷயமாக இருக்கிறது. ஆனால், அதிமுக வை சேர்ந்தவர்களுக்கு அது பெரிய விஷயமாகவே இல்லை என்றே தெரிகிறது.
நாற்பது நாட்களுக்கும் மேலாக டெல்லியில் போராடிய, விவசாயிகளை ஒரு முறை கூட சந்தித்து பேசாத பிரதமர், தமிழக மின் துறை அமைச்சருக்கு ஏற்கனவே அந்த வாய்ப்பை வழங்கினார்.
அவர் பிரதமரை சந்தித்து விட்டு வந்த பிறகுதான், பன்னீர் மீதும், மதுசூதனன் மீதும் அமைச்சர்கள் கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்றே டெல்லி சென்ற பன்னீர்செல்வம், இன்று பிரதமரை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது, அதிமுக கட்சி மற்றும் ஆட்சியை பற்றியே அதிகம் விவாதிக்க படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை, ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தும் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், சசிகலா குடும்பத்தோடு தொடர்பில் இருப்பவர்கள் பற்றி எல்லாம், பன்னீர் பேச இருக்கிறார்.
அண்மை காலமாக, திவாகரனை அமைச்சர்களும், எம்.எல்.ஏ க்களும் ரகசியமாக சந்தித்து பேசுவதை பன்னீர் அணி உன்னிப்பாக கவனித்து வருவதுடன், அதை பிரதமருக்கும் அவ்வப்போது, தெரியப்படுத்தி வருகிறது.
அதனால், கட்சி மற்றும் ஆட்சியில், திவாகரனின் ஆதிக்கம் மேலோங்கி வருவதை பற்றி பன்னீர் சற்று அதிகமாகவே பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லியில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய போதே, முன்னாள் அமைச்சர் முனுசாமி அதை வெளிப்படையாகவே கூறி இருக்கிறார்.
அத்துடன், எந்த பதவியிலும் இல்லாத தம்மை பிரதமர் சந்திக்கிறார் என்பதன் மூலம், தமக்கும் பிரதமருக்கும் உள்ள நெருக்கத்தையும், அவர் ஆளும் தரப்புக்கு வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.
அத்துடன், இரட்டை இலை சின்னம் தமக்கு கிடைத்து விட்டால், எடப்பாடி அணியில் உள்ள அனைவரும், தமது பக்கம் வந்து விடுவார்கள் என்பது பன்னீரின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
எனவே, அது குறித்தும் பிரதமரிடம் விவாதிக்க வேண்டிய அவசியம் பன்னீருக்கு இருப்பதால், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
குடியரசு தலைவர் தேர்தலில், அதிமுகவின் இரண்டு அணிகளை சேர்ந்த எம்.எல்.ஏ மற்றும் எம்.பி க்களின் வாக்குகளும், பாஜகவுக்கு சிந்தாமல், சிதறாமல் தேவை படுகிறது.
அதனால், தங்கமணியை சந்தித்த பிரதமர், பன்னீரையும் சந்திக்கிறார் என்றே டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. எனினும், பிரதமர் மனதில் என்ன இருக்கிறது என்பதை, ஜூலை மாதத்திற்கு பிறகுதான் அறியமுடியும்.
