அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்ட தினகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்கிற தனி கட்சியை தொடங்கினார். மக்களவை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட அமமுக படுதோல்வியை சந்தித்தது. அதன்பிறகு அக்கட்சியில் இருந்த முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவராக வெளியேறினர்.

இதனால் தொண்டர்கள் பலர் அதிர்ச்சியில் இருக்கின்றனர். இதையடுத்து  தினகரன் கட்சியை பலப்படுத்துவதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள். அதன்படி மாநிலம் முழுவதும் கட்சிக்கான புதிய நிர்வாகிகளை அறிவித்து வருகிறார். 

அந்த வகையில் பிரபல நகைச்சுவை நடிகரான செந்திலுக்கு அமைப்புச் செயலாளர் பதவியை வழங்கி இருக்கிறார் தினகரன். அவருடன் மன்னார்குடியை சேர்ந்த சிவா ராஜா மாணிக்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கதிர்காமு, தேவதாஸ், ஹென்றி தாமஸ் ஆகியோரும் அமைப்புச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதே போல தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளராக சுந்தராஜும், தெற்கு மாவட்ட செயலாளராக புவனேஸ்வரனும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் வெளியிட்டுள்ளார்.