அதிமுகவில் இருந்து ஓரங்கட்டப்பட்ட டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்கிற தனிக் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட அக்கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதனிடையே கட்சியின் முன்னணி நிர்வாகிகள் ஒவ்வொருவராக வெளியேறி வருகின்றனர்.

செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன், இசக்கி சுப்பையா, புகழேந்தி போன்ற கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் வெளியேறிவிட்டனர். இதனால் அமமுக தொண்டர்கள் அதிர்ச்சியில் இருந்தனர். கட்சியை பலப்படுத்தும் பணிகளில் தினகரன் தற்போது ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி மாநிலம் முழுவதும் புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார்.

இந்த நிலையில் அமமுகவின் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நடிகர் ரஞ்சித் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அமைப்பு செயலாளர்களாக திருவான்மியூர் முருகன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ் அருள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்ட செயலாளராக ஈஸ்வரனும், தேர்தல் பிரிவு துணைச் செயலாளராக திருப்பூர் விசாலாட்சியும்  மாணவரணி செயலாளராக பரணீஸ்வரனும் நியமிக்கப்பட்டுள்ளதாக டிடிவி தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.