சசிகலாவை சிறையில் சென்று சந்தித்தால், ஆட்சியையும், கட்சியையும் இழக்க நேரும் என்பதால், அவரை சந்திக்காமல் தினகரன் தவிர்த்து வருவதாகக் கூறப்படுகிறது.

மேலும், முதல்வர் எடப்பாடி, சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்கக் கூடாது என்று தடை விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அவரது உறவினர் மகாதேவன் இறந்ததையடுத்து, தஞ்சாவூர் புறப்பட்ட தினகரன், சசிகலா விரும்பினால், அவர் பரோலில் வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று பூடகமாகவே கூறினார்.

அத்துடன், இப்போதுள்ள நிலையில், சசிகலா இங்கு வந்து, மீண்டும் சர்ச்சை ஏற்படுவதை விட, அவர் வராமல் இருப்பதே நல்லது என்றும் தமக்கு நெருக்கமானவரிடம் அவர் கூறினாராம்.  

சசிகலாவுக்கு உடல்நிலை சரி இல்லாமல் இருக்கும்போது, அவர் ஓய்வு எடுப்பதே நல்லது என்றும் கூறி உள்ளார். 

அவர் சொன்னதற்கு ஏற்ப, நேரடி ரத்த சம்பந்தம் இல்லாத மகாதேவன் இறப்பில் பங்கேற்க, சசிகலாவுக்கு  சிறை நிர்வாகமும் அனுமதி மறுத்து விட்டது. 

சசிகலா சிறையில் இருப்பதால், கட்சியை தமது முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டார் தினகரன். அவர் சொல்லும் எதையும் கேட்பதில்லை என்பதால் தினகரன் மீது கடும் கோபத்தில் இருக்கிறார் சசிகலா.

சசிகலாவை "சொத்து குவிப்பு தண்டனை கைதி" என்று தினகரனே சொல்வதை அறிந்த சசிகலா மிகவும் வேதனை அடைந்துள்ளார்.

அத்துடன், இளவரசி மகன் விவேக் மூலம் எத்தனையோ முறை சொல்லி அனுப்பியும், சசிகலாவை சந்திப்பதை தொடர்ந்து தவிர்த்துக் கொண்டே வருகிறார் தினகரன்.

சசிகலா என்று ஒருவர் இல்லாவிட்டால், தினகரன் எப்படி துணை பொது செயலாளர் ஆகி இருப்பார் என்று கூறும் அவரது உறவுகள், இதற்கெல்லாம் விரைவில் ஒரு முடிவு வரும் என்றும் ஆவேசத்துடன் கூறி வருகின்றனர்.