dinakaran criticize chief minister palanisamy

மத்திய அரசு என்ன ஆணையிட்டாலும் அதை கேட்டு அதன்படி நடக்க முதல்வர் பழனிசாமி தயாராக இருக்கிறார் என தினகரன் விமர்சித்துள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு கடந்த ஓராண்டாக காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திமுக சார்பில் மருது கணேஷ், அதிமுக சார்பில் மதுசூதனன் மற்றும் சுயேட்சையாக தினகரனும் களமிறங்கியுள்ளனர். மொத்தம் 59 வேட்பாளர்கள் ஆர்.கே.நகரில் போட்டியிடுகின்றனர்.

திமுக, அதிமுக, தினகரன் ஆகிய மூன்று தரப்பும் ஒவ்வொரு வகையில், தங்களது வலிமையை நிரூபித்துக்காட்ட வேண்டிய கட்டாயத்தில் இந்த தேர்தலை எதிர்கொள்கின்றன. எனவே இதுவரை இல்லாத அளவிற்கு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஆர்.கே.நகரில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் திமுக, அதிமுக மற்றும் தினகரன் ஆகிய மூன்று தரப்பும் படு தீவிரமாக பணியாற்றி வருகின்றன. ஆர்.கே.நகர் தொகுதி முழுதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுவும் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் பிரசாரம் படு பயங்கரமாக மேற்கொள்ளப்பட்டது.

ஆர்.கே.நகரின் ஐஓசி பகுதியில் தினகரன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், முதல்வர் பழனிசாமியை கடுமையாக விமர்சித்து பிரசாரம் மேற்கொண்டார்.

ஓகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்ட மக்களை சந்திக்க முதல்வர் பழனிசாமி பயப்படுகிறார். தனது உறவினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால், தனக்கும் ஆபத்து வந்துவிடுமோ என பழனிசாமி பயப்படுகிறார். அதனால் தான் டைரி என்று சொன்னாலே பதறுகிறார். தனக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக்கூடாது என்பதற்காக மத்திய அரசு என்ன சொன்னாலும் அதனை நிறைவேற்ற பழனிசாமி தயாராக இருக்கிறார்.

 வடக்கு நோக்கி கைகூப்பி கும்பிட்டபடி இருக்கும் பழனிசாமி, டெல்லியில் இருப்பவர்கள் கடலில் குதிக்க சொன்னால் ஏன் என்று கூட கேட்காமல் உடனே குதித்துவிடுவார் என முதல்வர் பழனிசாமியை கடுமையாக விமர்சித்து பிரசாரம் மேற்கொண்டார்.