தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.கவுடன் தான் கூட்டணி என்று இறுதி முடிவெடுக்கப்பட்டுவிட்டதாக தினகரன் தரப்புக்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து திட்டவட்டமாக பதில் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை 25 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது தான் தினகரனின் நிலைப்பாடு. இதற்கு தகுந்தாற்போல் கூட்டணி கட்சிகளை தினகரன் தேடி வருகிறார். அதாவது காங்கிரஸ் வந்தால் 11 தொகுதி மற்ற கட்சிகளுக்கு ஐந்து தொகுதி எஞ்சிய தொகுதிகளில் அ.ம.மு.க என்பது தான் தினகரன் கணக்கு. கடந்த ஆண்டு அக்டோபர் வரை கூட்டணி விஷயத்தில தினகரன் மிகவும் நம்பிக்கையாக இருந்தார். 

காரணம் காங்கிரஸ் கட்சிக்கு தங்கள் மீது எப்போதுமே ஒரு சாப்ட் கார்னர் உண்டு என்று தினகரன் நம்பிக் கொண்டிருந்தது தான். அதாவது ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த தமிழக அரசை பா.ஜ.க ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது. அப்போது இங்கு இருந்து யாருமே அழைக்காத நிலையிலும் நேராக அப்பலோவிற்கு வந்து சசிகலாவை சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு சென்றார் ராகுல். மேலும் எதற்கும் பயப்பட வேண்டாம் காங்கிரஸ் உங்களுடன் இருக்கிறது என்றும் ராகுல் அப்போதே சசிகலா தரப்புக்கு உறுதி அளித்ததாகவும் ஒரு பேச்சு உண்டு. அந்த சமயத்தில் தி.மு.க தலைவர் கலைஞரை கூட ராகுல் நேரில் சென்று பார்க்கவில்லை. ஜெயலலிதாவை பார்க்க வந்த ராகுல் சசிகலாவை சந்தித்து விட்டு நேராக டெல்லிக்கு பறந்துவிட்டார். 

இதனால் காங்கிரஸ் கட்சி தங்களுக்கு எப்போதும் துணை இருக்கும் என்று தினகரன் உள்ளிட்டோர் நம்பியிருந்தனர். ஆனால் குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளருக்கு ஆதரவான சசிகலா நிலைப்பாட்டால் அப்போதே காங்கிரஸ் கட்சி அதிருப்தி அடைந்தது. இத்தனைக்கும் காங்கிரஸ் வெளிப்படையாக அ.தி.மு.கவிடம் ஆதரவு கேட்டது. 

ஆனால் ஆதரவு கேட்காத நிலையிலும் வழிய சென்று பா.ஜ.க வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை அப்போது சசிகலா வசம் இருந்த அ.தி.மு.க ஆதரித்தது. பின்னர் கலைஞர் மறைவு, அ.தி.மு.கவில் பிளவு போன்ற காரணங்களால் தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க தான் தங்களுக்கு சரியான தேர்வாக இருக்கும் என்று ராகுல் முடிவெடுத்துவிட்டார். இதனால் வேறு எந்த கட்சியுடனும் கூட்டணி பேச வேண்டாம் என்று ராகுல் கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது.

 

இதனால் தான் கடந்த ஆண்டு வரை தேசிய கட்சி, மாநில கட்சிகளுடன் கூட்டணி என்று கூறி வந்த தினகரன் நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும் போது தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று கூறினார். இதற்கு காரணம் காங்கிரசுடனான கூட்டணி கதவுகள் மூடப்பட்டதே ஆகும் என்கிறார்கள். மேலும் மாநில கட்சிகளுடன் பேசி வருவதாகவும் தினகரன் தெரிவித்திருந்தார். இதனால் நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை தினகரன் அமைக்க உள்ள கூட்டணி எப்படி இருக்கும்? என்கிற ஒரு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.