Dinakan or edapadi palanisami Who will win Who will fall

எடப்பாடி பழனிச்சாமி அணியில் 12 ஸ்லீப்பர் செல் எம்.எல்.ஏக்கள் இருப்பதாகவும் பழனிச்சாமி விரைவில் வீட்டுக்கு போவார் எனவும் தினகரன் தெரிவித்துள்ளார்.

தினகரனுக்கு ஆதரவாக ஏற்கனவே 18 எம்.எல்.ஏக்கள் இருக்கும் நிலையில், தன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சிலர் பழனிச்சாமி அணியில் இருப்பதாகவும் தேவையான நேரத்தில் அவர்கள் வெளிவருவார்கள் எனவும் தினகரன் தெரிவித்திருந்தார். அப்படி ஒரு நிலை ஏற்பட்டு எம்.எல்.ஏக்கள் காலை வாரிவிட்டுவிடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மற்ற எம்.எல்.ஏக்களை மிரட்டும் தொனியில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இதற்கெல்லாம் சற்றும் அசராத தினகரன், பழனிச்சாமி அணியில் தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 12 பேர் ஸ்லீப்பர் செல்களாக இருப்பதாவும் தேவையான நேரத்தில் வெளிவருவார்கள் எனவும் விரைவில் பழனிச்சாமி வீட்டிற்கு அனுப்பப்படுவார் எனவும் எச்சரிக்கும் வகையில் பேசியுள்ளார்.

ஆனால் தினகரன், எதிர்க்கட்சிகள் என எவரது எதிர்ப்புக் குரல்களுக்கும் சற்றும் அசைந்துகொடுக்காத பழனிச்சாமி, ஆட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருக்கிறார். அதற்காக எந்த எல்லைக்கும் சென்று யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தயாராக இருப்பதாகவே தெரிகிறது. அந்த வகையில், தினகரனின் பேச்சுக்களையோ மிரட்டல்களையோ எச்சரிக்கைகளையோ ஒரு பொருட்டாக கூட பழனிச்சாமி மதிக்கவில்லை என்பதும் அப்பட்டமாக தெரிகிறது. தன்னிடம் ஆட்சி அதிகாரம் இருக்கிறது; யாரால் என்ன செய்துவிட முடியும்? அதேநேரத்தில் தான் நினைத்தால் எதையும் செய்துவிட முடியும் என்ற தைரியத்தில் செயல்படுகிறார் பழனிச்சாமி.

தினகரன் சொல்வதுபோல் உண்மையாகவே ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்களா? அப்படியே இருந்தாலும் அவர்கள் ஸ்லீப்பிங் மோடுக்கு போய்விடாமல் தேவையான நேரத்தில் தினகரனுக்கு கைகொடுப்பார்களா? ஸ்லீப்பர் செல்களை கண்டறிந்து தன்வசப்படுத்துவாரா பழனிச்சாமி? தினகரனின் வியூகத்தை தகர்ப்பாரா? போன்ற பல்வேறு கேள்விகளுடன் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது தமிழக அரசியல் களம்.

வெல்லப்போவது யார்? வீழப்போவது யார்? பார்ப்போம்….