DIG rupa pressmeet about sasikala issue
பரப்பன அக்ரஹார சிறையில் நடக்கும் முறைகேடுகளை வெளிக் கொண்டு வந்ததற்காக, என்னை பழிவாங்கும் முயற்சியில் டிஜிபி சத்தியநாராயணா குற்றம்சாட்டி வருவதாகவும், என் மீது தவறு இருந்தால் எந்த விசாரணைக்கு தயார் என்றும் டிஐஜி ரூபா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில், அதிமுக பொது செயலாளர் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாகக் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியவர் கர்நாடக சிறைத்துறை டிஐஜி ரூபா.
கர்நாடக சிறைத்துறை டிஐஜியாக அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்ட ரூபா, சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாக கூறினார். சிறைச்சாலை ஆய்வின்போது, சசிகலாவுக்கு தனி சமையல் அறை அளிக்கப்பட்டுள்ளதாகவும், சமையல் செய்ய சில கைதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் டிஐஜி ரூபா தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக சசிகலா தரப்பில் இருந்து, டிஜிபி சத்யநாராயணாவுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் அதற்கான ஆதாரம் உள்ளதாகவும் ரூபா குற்றம்சாட்டியிருந்தார்.
இது குறித்து, டிஜிபி சத்யநாராயணாவுக்கு பதில் அளிக்க வேண்டும் என்றும் அவர் அறிக்கை ஒன்றையும் அனுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்து பேசிய டிஜிபி சத்யநாராயணா, சசிகலாவுக்கு சலுகைகள் ஏதும் தரவில்லை என்றும், சமையல் அறை எதுவும் அமைக்கப்படவில்லை என்றும் மறுப்பு தெரிவித்திருந்தார்.
டிஜிபி சத்யநாராயணாவின் பேட்டிக்கு மறுப்பு தெரிவித்து டிஐஜி ரூபா, இதனால் எனக்கு லாபம் ஏதும் இல்லை எனவும் கூறியிருந்தார். டிஐஜி ரூபாவின் குற்றச்சாட்டு குறித்து அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தனிக்குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், டிஐஜி ரூபா இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது குறித்த அறிக்கையில் உறுதியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டு விவகாரத்தில் எனக்கு எந்த லாபமும் இல்லை என்றும், இந்த பிரச்சனையில் என் மீது குறி வைப்பது நியாயமில்லை எனவும் டிஐஜி ரூபா தெரிவித்துள்ளார்.

பழிவாங்கும் நோக்கில் என்மீது சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயண பேட்டி அளித்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் எந்த கவலையும் இல்லை என்றார்.
சிறையில் நடக்கும் முறைகேடுகளை வெளிக் கொண்டு வந்ததற்காக என்னை பழிவாங்கும் முயற்சியாக இது நடப்பதாகவும், என் மீது தவறு இருந்தால் எந்த விசாரணைக்கும் தயார் என்றும் டிஐஜி ரூபா கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சித்தராமையா விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ள நிலையில், டிஐஜி ரூபா ஊடகங்களுக்கு தொடர்ந்து பேட்டி அளித்து வருவது விதிகளுக்கு புறம்பானது என காவல் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் கூறுகின்றனர்.
