நேர்மையான அதிகாரிகளை கவுரவிக்கும் விதமாக வழங்கப்பட்ட  விருதை தனக்கு வேண்டாம் என கர்நாடக போலீஸ் அதிகாரி ரூபா மறுத்துள்ளார்.

சொத்துக்கு குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா மற்றும் இளவரசிக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டதாகவும், அதற்காக  2 கோடி ரூபாய்  லஞ்சம் பெற்றதாக கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயணராவ் மீது டி.ஐ.ஜி ரூபா குற்றம் சாட்டி இருந்தார்.

இந்த குற்றச்சாட்டு இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி கர்நாடக உள்துறையிடம் அறிக்கை தாக்கல் செய்து உள்ளனர்.

தற்போது ரூ.2 கோடி லஞ்ச விவகாரம் குறித்து கர்நாடக மாநில ஊழல் தடுப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கர்நாடக முதலமைச்சர்  சித்தராமையா கூறியதால்தான் சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது என்று தற்போது சிறைத்துறையில் இருந்த ஓய்வு பெற்ற டி.ஜி.பி சத்தியநாராயணராவ் கூறினார். அதற்கு சித்தராமையா மறுப்புத் தெரிவித்திருந்தார்.

இந்த ஊழல் குற்றச்சாட்டின் மூலம் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு பெரும் சவாலாக இருந்து வருபவர் ரூபா. இவரது துணிச்சல் மற்றும் நேர்மை பொது மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநில டிஐஜியாக பணியாற்றி வரும் ரூபாவுக்கு பெங்களூரில் உள்ள அறக்கட்டளை நிறுவனம் ஒன்று நேர்மைக்கான சிறப்பு விருதை அறிவித்தது.

ஆனால் அதனை ஏற்க மறுத்த ரூபா, அந்த அறக்கட்டளை நிறுவனத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியிள்ளார். அதில் இந்த விருதை ஏற்க என மனசாட்சி இடம் தரவில்லை. ஒவ்வொரு அரசு ஊழியரும் நடுநிலையான சமநிலையை மட்டுமே அரசியல் கட்சிகளிடமும், அறக்கட்டளைகளிடம் இருந்தும் நான் எதிர்பர்க்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

இன்று இந்த விருதை வாங்குவதன் மூலம் நாளை அந்த அறக்கட்டளைக்கு  சாதகமான செயல் எதையும்  செய்துவிடக்கூடாது என்பதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

டிஐஜி ரூபாவின் இந்த செயல் மூலம் அவருக்கு மேலும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.