செக்மோசடி வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை  என்பதனை நான்  எதிர்பார்க்கவில்லை என்றும், வழக்கு தள்ளுபடியாகும் என்று நினைத்திருந்ததாகவும் நடிகர் சரத் குமார் தெரிவித்துள்ளார். மேலும் இதை எதிர்த்த உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

செக் மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார் மற்றும் அவரது துணைவி ராதிகா ஆகியோருக்கு ஒராண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கான  சிறப்பு  நீதிமன்றத்திற்கு வெளியே, நடிகரும், சமத்துவ மக்கள் கட்சித்தலைவருமான சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியதாவது: 

ஓராண்டு சிறை தண்டனை என்பதனை நான் எதிர்பார்க்கவில்லை.வழக்கு தள்ளுபடியீகும் என்று நினைத்திருந்தேன். உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம், அதனால் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.எங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைத்துள்ளோம், குறிப்பிட்ட தேதிக்கு முன்னரே செக்கை வங்கியில் செலுத்தி உள்ளார்கள். இருப்பினும் எங்கள் தரப்பில் பினைத்தொகையாக சொத்துக்களும் குறிப்பிட்ட தொகைக்கு மேலாகவே உள்ளது. 

அதனால் எங்கள் தரப்பு நியாயங்களை நாங்கள் எடுத்துரைப்போம்.மேலும் தண்டனை தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளோம், இரு தினங்களுக்கு முன்பு ராதிகா சரத்குமார் கொரோனா தடுப்பு மருந்து எடுத்துக் கொண்டார்,  அவருக்கு லேசான தலைவலி காய்ச்சல் உள்ளது. அதனால், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இது முற்றிலும் தொழில் சம்பந்தப்பட்டது.  அரசியல்  பழிவாங்கலாக நினைக்கவில்லை. இவ்வாறு சரத்குமார் கூறினார்.