மதுக்குடிப்பது, சிகரெட் பிடிப்பதை எதிர்த்து நடத்திய போராட்டங்களால் ராமதாஸுக்கு சினிமா என்றாலே அலர்ஜி என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்பட்டு விட்டது.  ஆனால், அவரும் சினிமாவில் நடித்திருக்கிறார் என்பதுதான் இங்கு ஆச்சர்யத் தகவல். 

கார்வண்ணன் இயக்கத்தில் முரளி, ரோஹினி நடித்து 1995ம் ஆண்டு வெளியான ’தொண்டன்’ படத்தில், குழந்தைகளை வேலைக்கு அமர்த்தும் அரசியல்வாதிகளுக்கு எதிராக போராடும் டாக்டர் கதாபாத்திரத்தில் ராமதாஸ் நடித்திருக்கிறார்.  குழந்தைகளை வேலைக்கு அமர்த்தக்கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் அவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும். இதில், மிகவும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், கலைஞர் கருணாநிதி தமிழக முதல்வராகவே தோன்றி, ராமதாஸை பாராட்டி பேசுவதுபோல் ஒரு காட்சி இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளது.

இதே போல், சந்திரசேயன் இயக்கத்தில் 2006ம் ஆண்டு வெளியான ’இலக்கணம்’படம் தமிழ் சினிமாவில் மிக முக்கியமானப் படம். எதனால் அப்படி சொல்கிறோம் என்றால், நமக்கு அரசியல்வாதிகளாகவும் சமூகவாதிகளாகவும் மட்டுமே பழக்கப்பட்ட சிலர், இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். பெரியார் மீது பற்றுள்ள பத்திரிக்கையாளனாக விஷ்ணுபிரியன் நடித்திருக்கும் இந்தப் படத்தில் அவருக்கு மாமாவாக நடித்திருப்பது பாமக கட்சிக்காக கடுமையாக உழைத்த காடுவெட்டி குருதான்.  அதே போல், இந்தப் படத்தில் தலைமை பத்திரிக்கை ஆசிரியராக திராவிட சிந்தனையாளர் சுப.வீரபாண்டியன் நடித்திருப்பார். அத்துடன், தமிழ் தேசிய அரசியல் பேசிவரும் பழ.நெடுமாறன், தன் சொந்த அடையாளத்துடனே இதில் நடித்திருப்பார். இவை எல்லாம், ’தொண்டன்’ படத்துக்கு மிகப் பெரிய பலமாக இருந்தது.

தமிழக அரசியலில் தொடர்ந்து தன் இருப்பை தக்கவைத்து வரும் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன், சினிமாவில் நடித்துள்ளார் என்று பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  ‘அன்புத்தோழி’ படத்தில்தான் திருமாவளவன் முதன்முதலில் நடித்தார். இந்தப் படத்தில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரம், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவராக இருந்த வேலுப்பிள்ளை பிரபாகரனை முன்மாதிரியாக வைத்து அமைக்கப்பட்டது.  இதையடுத்து 'மின்சாரம்’ என்ற படத்தில், எளிமையான முதல்வராக 'நடித்திருந்தார்'. திமுக, அதிமுக என இரண்டு சர்காரிலும் இருந்த பழ.கருப்பையா விஜய் நடித்த 'சர்கார்' படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.  அதுமட்டுமின்றி, 2010ம் ஆண்டு வெளியான 'அங்காடித் தெரு’ படத்தில் முரட்டு வில்லனாக நடித்தவரும் சாட்சாத் இவரேதான்.