"திருவாரூரில் இயங்கி வரும் மத்திய பல்கலைக்கழகம் இந்த தேர்வு முறையில் மாணவர் சேர்க்கையை 2010ஆம் ஆண்டு முதலே மேற்கொண்டு வருவது திமுகவுக்குத் தெரியாதா? அல்லது, முன் போல் இல்லாமல் இப்பொழுது தமிழ் மொழியிலும் தேர்வு நடப்பதனால் திமுக CUET தேர்வுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றினார்களா?”
2010லிருந்து இந்த தேர்வு CUET நடைமுறையில் உள்ளது திமுகவுக்குத் தெரியாதா என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
CUET நுழைவுத் தேர்வு
இந்தியாவின் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களில் வரும் கல்வி ஆண்டில் இளநிலை படிப்புகளுக்குப் பொது நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது. Common University Entrance Test (CUET) என்ற இந்த தேர்வு, ஜூலை முதல் வாரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த நுழைவுத் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தீர்மானத்தை நேற்று கொண்டு வந்தார். ‘12-ஆம் வகுப்பு மதிப்பெண்களை கணக்கில் கொள்ளாமல் நுழைவுத்தேர்வு மூலம்தான் மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

முதல்வர் கொண்டு வந்த தீர்மானம்
இது மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களின் சேர்க்கையை குறைக்கும். பயிற்சி மையங்களில் புற்றீசல்போல உருவாகும் அபாயம் இருக்கிறது. இதன் மூலம் இளநிலை படிப்புகளுக்கு மத்திய பல்கலைக்கழகங்களில் பொது நுழைவுத் தேர்வை வைப்பதை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்’ என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்துக்கு அதிமுகவும் ஆதரவு அளித்தது. இதனையடுத்து சியூஇடி நுழைவுத் தேர்வுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேறியது. பாஜக தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது.

அண்ணாமலை கேள்வி
’கியூட்’ தேர்வுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேர்றப்பட்ட நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “திமுக கட்சியினுடைய கடந்த கால இரட்டை நிலைப்பாடுகளை பின்னுக்குத் தள்ளியது போல் உள்ளது திமுக அரசு சட்டமன்றத்தில், CUET தேர்வு முறைக்கு எதிராக நிறைவேற்றிய தீர்மானம்! 2010லிருந்து இந்த தேர்வு CUCET நடைமுறையில் உள்ளது திமுகவுக்குத் தெரியாதா? திருவாரூரில் இயங்கி வரும் மத்திய பல்கலைக்கழகம் இந்த தேர்வு முறையில் மாணவர் சேர்க்கையை 2010ஆம் ஆண்டு முதலே மேற்கொண்டு வருவது திமுகவுக்குத் தெரியாதா? அல்லது, முன் போல் இல்லாமல் இப்பொழுது தமிழ் மொழியிலும் தேர்வு நடப்பதனால் திமுக CUET தேர்வுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றினார்களா?” என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்,
