தேனி குரங்கணி காட்டில் தீ அணைந்து விட்டாலும் கூட அந்த பிரச்னையால் ஏற்பட்ட சர்ச்சை வெப்பம் இன்னமும் தகித்துக் கொண்டேதான் இருக்கிறது.
அதில் சில விமர்சனங்கள் தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் மற்றும் எஸ்.பி. பாஸ்கரன் ஆகியோரையும் விமர்சித்திருப்பதுதான் ஷாக்கே!
அப்படி என்ன விமர்சனம் அது...

“குரங்கணி தீ விபத்து நிகழ்ந்தபோது தேனி அருகே லட்சுமிபுரத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் ஏற்பாடு செய்திருந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற இருந்தது.

அதற்கான பணிகளில் மாவட்ட கலெக்டர் பல்லவி மற்றும் எஸ்.பி. பாஸ்கரன் ஆகியோர் மும்முரமாக மூழ்கி இருந்தனராம். இந்த நிலையில் காட்டு தீ விவகாரம் குறித்து கலெக்டர் அலுவலகத்துக்கும், எஸ்.பி. அலுவலகத்துக்கும் மாலை மூன்று மணி சுமாருக்கே தகவல் வந்துவிட்டதாம். இந்த சம்பவம் பற்றி கலெக்டரிடமே தகவல் தெரிவித்ததாக ஒரு பெண் வெளிப்படையாக நிருபர்களிடம் தெரிவித்திருக்கிறார். ஆனால் கலெக்டரும், எஸ்.பி.யும் இது பற்றி அலட்டிக் கொள்ளாமல் துணை முதல்வர் விழா பணியிலேயே பிஸியாக இருந்திருக்கின்றனராம்.

பொறுத்துப் பார்த்து பொறுமை இழந்த சிலர் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்துக்கே போன் அடித்துவிட்டனராம். அங்கிருந்து தேனி மாவட்ட காவல்துறையை கூப்பிட்டு பரேடு நடத்தியிருக்கின்றனர். இதற்குள் மீடியா மற்றும் மக்கள் வசம் வாட்ஸ் அப் மூலமாக தீ விவகாரம் பரவியது. மக்களே ரியாக்ட் செய்ய துவங்கியும் கூட கலெக்டரும், எஸ்.பி.யும் சைலண்டாக இருந்ததாக தகவல்.

இதைத்தொடர்ந்து கோட்டையிலிருந்தும், டி.ஜி.பி. அலுவலகத்திலிருந்தும் இந்த இரண்டு அதிகாரிகளையும் அழைத்துக் காய்ச்சி எடுத்துவிட்டனராம் செயலர் மற்றும் டி.ஜி.பி. லெவல் உயரதிகாரிகள். அதன் பிறகே இருவரும் தலை தெறிக்க ஸ்பாட் பக்கம் ஓடினார்களாம்.

வனத்தினுள் இப்படி ஒரு குரூர சம்பவம் நிகழ்ந்தபோது வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பன்னீர்செல்வத்தின் மகன் நடக்கும் விழாவில் கருத்தாக இருந்தார். அவரும் பெரிதாய் துவக்கத்தில் அலட்டவில்லை.

ஆக இப்போது தேனி மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி. இருவரும் தகவல் கிடைத்த மாத்திரத்தில் மிக விரைந்து செயலாற்றி இருந்தாலே இவ்வளவு மோசமான

இழப்பை சந்திக்காமல் சில உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கலாம்! என்று தகவல்கள் கசிகின்றன.
இது உண்மையா ஆபீஸர்ஸ்!