ஒரு குற்றச்சாட்டைத் தெரிவித்தால் அதில் குறைந்தபட்ச உண்மையாவது இருக்க வேண்டும். எனவே, அண்ணாமலையின் இந்தப் புகாருக்கு நீதிமன்றத்தின் மூலம் பதில் சொல்ல வேண்டும். 

முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ. 5 ஆயிரம் கோடியோடு துபாய் சென்றுள்ளார் என்கிறார் அண்ணாமலை. முதலில், ரூ. 5 ஆயிரம் கோடியை விமானத்தில் எப்படி கொண்டு செல்ல முடியும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். 

ரூ.30க்கு பெட்ரோல்

சென்னையில் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “இலங்கையிலும் இந்தியாவிலும் எரிபொருள் விலை அதிகமாக இருப்பதற்கு அரசாங்கங்களின் தவறான கொள்கைகள்தான் காரணம். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்ற, இறக்கத்துடன்தான் இருக்கும். மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 108 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், அந்தச் சுமையை மக்கள் மீது திணிக்கவில்லை. மானியம் வழங்கி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 70-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், மோடி ஆட்சிக்கு வந்தபிறகு ஒருபோதும் கச்சா எண்ணெய் 108 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டதே இல்லை. 

அண்ணாமலை மீது அட்டாக்

எனவே, இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ. 30-க்கு விற்க முடியும். ஆனால், மோடி அரசு கடந்த 7 ஆண்டுகளில் ரூ. 22 லட்சம் கோடி வரி விதித்து இருக்கிறது. இதனால்தான் பெட்ரோல், டீசல் விலை இந்தியாவில் உயர்வாக இருக்கிறது. மக்கள் இதனை பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ. 5 ஆயிரம் கோடியோடு துபாய் சென்றுள்ளார் என்கிறார். முதலில், ரூ. 5 ஆயிரம் கோடியை விமானத்தில் எப்படி கொண்டு செல்ல முடியும்? அப்படியானால், மத்திய அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது? உளவுத் துறை என்ன செய்தது? விமான நிலைய அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

பாஜக எதிர்க்கட்சியா?

இப்படியெல்லாம் பல கேள்விகள் சமூக வலைத்தளங்களில் எழுப்பப்படுகின்றன. ஒரு குற்றச்சாட்டைத் தெரிவித்தால் அதில் குறைந்தபட்ச உண்மையாவது இருக்க வேண்டும். எனவே, அண்ணாமலையின் இந்தப் புகாருக்கு நீதிமன்றத்தின் மூலம் பதில் சொல்ல வேண்டும். தமிழக பட்ஜெட்டுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஆயிரம் பேரை பாஜக கூட்டிவிட்டால், எதிர்க்கட்சி ஆகிவிட முடியுமா? எங்கள் கட்சியின் தொகுதி தலைவர்கூட 5 ஆயிரம் பேரை திரட்டிவிடுவார்” என்று கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.