கோபாலபுரத்து ஆக்டோபஸ்கள் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தை முழுமையாக ஆக்கிரமித்துள்ளார்கள். பொதுமக்கள், ஊடகங்களில் பல கேள்விகளை முன்வைக்கிறார்கள்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் துபாய் சென்றது அரசு முறை பயணமா, அரசர் முறை பயணமா? முதலீட்டை ஈர்க்கவா, முதலீட்டைச் செய்யவா? என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இரட்டை நிலைப்பாடு
பல்வேறு வழக்குகளில் கைதான் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “திமுக தொழிலாளர் விரோத போக்கு, அரசு ஊழியர் விரோத போக்கு என்ற இரட்டை நிலையைக் கொண்டிருக்கிறது. தொழிலாளர்கள் வேலைக்கு வரவில்லை என்றால் சம்பளம் இல்லை என்று அறிவித்துவிட்டார்கள். ஆனால், கட்சியில் இருப்பவர்கள் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்துகிறார்கள். இந்த விஷயத்தில் திமுகவுக்கு தெளிவான நிலை இல்லை. பழைய பென்ஷன் திட்டத்தை ஆட்சிக்கு வந்தால் உடனே நிறைவேற்றுவோம் என்று திமுகவினர் சொன்னார்கள். ஆனால், அந்தக் கோரிக்கை கிணற்றில் போட்ட கல்லாகத்தான் இருக்கிறது. இன்று மட்டுமல்ல, நாளையும் நிறைவேற்றப் போவதில்லை. இதுதான் நிதர்சனம்.

விலை குறைப்பு எங்கே?
மாநில அரசு தொழிலாளர் விரோதப் போக்கை கடைப்பிடிப்பதால் நாங்கள் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறோம். பெட்ரோல், டீசலைப் பொறுத்தவரை மத்திய அரசு பெட்ரோலுக்கு ரூ.10 குறைத்தது. டீசலில் ரூ. 5 குறைத்தது. ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம் என்ற திமுக அதை செய்யவில்லை. ஆட்சிக்கு வந்து 1- மாதங்கள் ஆகிவிட்டன. பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டிவிட்டது. டீசல் விலையும் 100 ரூபாயை எட்டப்போகிறது. மத்திய அரசு விலையை குறைத்தவுடன் மாநில அரசும் குறைத்திருந்தால் பொதுமக்கள், தொழிலாளர்களுக்கு சுமைகள் குறைந்திருக்கும். டீசல் விலை ஏறினால் விலைவாசியும் ஏறிவிடும். இதனால் பொதுமக்களுக்கு மேலும் சுமை அதிகரிக்கும்.
ஏமாற்று வித்தை
மாநில அரசு டீசல் விலையைக் குறைப்பதுதான் நல்ல தீர்வு. பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்தும், மாநில அரசு மவுனியாக உள்ளது. டீசல் விலைக் குறைப்பை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதேபோல காஸ் மானியம் ரூ. 100 தருவேன் என்று சொன்னார்கள். அதையும் இன்னும் தரவில்லை. இந்த வாக்குறுதியையும் காற்றில் பறக்கவிட்டு விட்டார்கள். கல்விக்கடன் ரத்து என்றார்கள். எத்தனைப் பேருக்குக் கல்விக்கடனை ரத்து செய்தார்கள்? விவசாயக்கடன் தள்ளுபடி என்றார்கள். அது என்ன ஆச்சு? நகைக்கடனைப் பொறுத்தவரை 35 லட்சம் பேரைத் தகுதி நீக்கம் செய்துவிட்டு, 13 லட்சம் பேரை ஆய்வு செய்கிறோம் என்று சொல்லி வருகிறார்கள். இதுவும் ஒரு ஏமாற்று வித்தையே.

திமுக குடும்ப கட்சி
கோபாலபுரத்து ஆக்டோபஸ்கள் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தை முழுமையாக ஆக்கிரமித்துள்ளார்கள். பொதுமக்கள், ஊடகங்களில் பல கேள்விகளை முன்வைக்கிறார்கள். இது அரசு முறை பயணமா, அரசர் முறை பயணமா? இதுதான் மக்களின் கேள்வி. முதலீட்டை ஈர்க்கவா, முதலீட்டைச் செய்யவா? இதுதான் அடுத்த கேள்வி. எடப்பாடியார் வெளிநாடுகளுக்குச் சென்று ஏறக்குறைய ரூ. 8 ஆயிரம் கோடிக்கு மேல் தமிழகத்துக்கு முதலீட்டைக் கொண்டுவந்தார். ஆனால், இவர்கள் ரூ. 2 ஆயிரத்து 700 கோடி என்கிறார்கள். இந்தப் பயணம் குறித்து சர்ச்சைகள் உள்ளன. அமைச்சர் தங்கம் தென்னரசு விமானம் இல்லாத காரணத்தால் சிறப்பு விமானத்தில் சென்றதாகக் கூறுகிறார். கிட்டத்தட்ட 14 விமானங்கள் அன்று இருந்துள்ளது. எவ்வளவு பெரிய உண்மையை முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வேலையைத் தொழில்துறை அமைச்சர் செய்துள்ளார்? இந்தக்குடும்ப சுற்றுப்பயண செலவை திமுக ஏற்கிறது என்கிறார். அரசர் முறை பயணத்தின் செலவை திமுக ஏற்கிறது என்றால் திமுக ஒரு குடும்பக்கட்சி என்பதைத்தான் தங்கம் தென்னரசு உறுதிப் படுத்தியுள்ளார். இதுதான் உண்மை.” என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
