"கடவுளை எவன்டா நேரில் பார்த்திருக்கீங்க.? கடவுள் என்பது வரைந்த ஓவியம்தானே, செதுக்கப்பட்ட சிலைதானே, கடவுளை எவண்டா பார்த்தீங்க? இதோ நம் எதிரில் இருக்கிறார்களே பெண்கள் இவர்கள் தான் கடவுள்.
தாயை மிஞ்சிய கடவுள் இல்லை இதுவரை கடவுளை யார் பார்த்திருக்கிறீர்கள், பெண்கள் தான் கடவுளென நடிகர் சிவக்குமார் மேடையில் கண்கலங்கி பேசியுள்ளார். அந்த வீடியோ காண்போரை கரைய வைப்பதாக உள்ளது. தனது மகன் நடிகர் கார்த்திக் நடத்தும் உழவன் பவுண்டேஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சிவகுமார் இவ்வாறு கூறியுள்ளார்.
80 வயது ஆகியும் இன்னும் இளமை மாறாத இளைஞராக பொது நிகழ்ச்சிகளில் வலம் வருகிறார் சிவகுமார். அதனால்தான் தமிழ்சினிமாவின் மார்கண்டேயன் என்று அழைக்கப்படுகிறார். கோவை மாவட்டம் காசி கவுண்டன் புதூர்தான் அவர் பிறந்த ஊர். அவரின் இயற்பெயர் பழனிச்சாமி, இளம் வயதில் சிறந்த ஓவியர், சினிமா மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக சென்னைக்கு வந்து சினிமா நடிகரானார் சிவக்குமார். ஓவியர், பேச்சாளர் என பன்முகத்தன்மை அவருக்குண்டு, துவக்கத்தில் பல முன்னணி நடிகர்களுக்கு துணை நடிகராக நடித்தவர். பிறகு கதாநாயகன் வேடம் ஏற்று நடித்தார். பொண்ணுக்கு தங்க மனசு, அன்னக்கிளி, உறவாடும் நெஞ்சம், ரோசாப்பூ ரவிக்கைக்காரி என பல படங்களில் அவர் நடித்துள்ளார்.

இதில், அக்னி சாட்சி, சிந்து பைரவி, ரோசாப்பூ ரவிக்கைக்காரி போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை. ஒழுக்கம், சுயகட்டுப்பாடு, யோகா, உடற்பயிற்சி என அனைத்திலும் கவனம் செலுத்த கூடியவர் சிவக்குமார். இந்நிலையில்தான் தனது இளைய மகன் கார்த்திக் நடத்தும் உழவன் பவுண்டேஷன் சார்பாக விருது வழங்கும் நிகழ்ச்சி சமீபத்தில் சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது. அதில் சூர்யா, கார்த்திக் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். அப்போது விவசாயத்தில் சாதித்த விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அப்போது சிவகுமார் மேடையில் உரையாற்றினார். அவர் பேசியதாவது:- எனது குடும்பம் விவசாயக் குடும்பப் பின்னணியை கொண்டது. நான் குழந்தையாக இருக்கும்போது என் தந்தை இறந்துவிட்டார். என்னை என் தாய் தான் வளர்த்தார்.
இப்போது எனது மகன் கார்த்திக் விவசாய பவுண்டேஷன் தொடங்கி நடத்தி வருகிறார். கார்த்திக் ஒரு விவசாயின் பேரன் தான், கார்த்தி சிவகுமாரின் மகனாக இருக்கலாம் ஆனால் சிவகுமார் ஒரு ஏழைத்தாயின் மகன்தான், விவசாயிகள் என்றால் வறுமையில் வாடுபவர்கள் என்பதையும் தாண்டி இளைய சமுதாயத்தினர் விவசாயத்துக்கு வந்து நமது உணவு தேவைகளை நாமே பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த உழவன் பவுண்டேஷன். நான் 10 மாத கைக்குழந்தையாக இருக்கும்போது என் தந்தை இறந்துவிட்டார், என் தாய் தான் என்னை வளர்த்தார், நான் பல மேடைகளில் சொல்லி இருக்கிறேன் என் தாயை இழந்து விட்டு என் தந்தையிடம் நான் வளர்ந்திருந்தால் நான் அனாதையாகி இருப்பேன். எந்த தந்தையாலும் 12 மாத கைக் குழந்தையை எடுத்து வளர்த்து விட முடியாது.

நான் சிறுவனாக இருந்த காலத்தில் எல்லாம் எங்கள் ஊர் பக்கம் சோலம், கேழ்வரகு, கம்பு போன்ற தானியங்கள் விளையாது, வரண்ட நிலம், அரளிக்கோட்டை எருக்கஞ் செடி மட்டும்தான் வளரும். இது இரண்டுமே விஷம், ஒரு கைப்பிடி அளவிற்கு சாறெடுத்து 50 பேர் சாப்பிட்டால் அடுத்த நொடியில் அனைவரும் இறந்து போய் விடுவார்கள். திரும்பிய பக்கமெல்லாம் அரளிக்கொட்டையும் எருக்கஞ்செடியும் இருந்த போதும் கூட அந்த வறுமையிலும் சாமி கொடுத்த குழந்தையை கொல்லக்கூடாது என என் அம்மா என்னை வளர்த்தார். அதனால்தான் நான் உங்கள் முன்னால் நிற்கிறேன். அவ்வளவு வறுமையிலும் என்னை காப்பாற்றிய தெய்வம் என் தாய் தான். பெண்கள் தான் கடவுள், " கடவுளை எவன் நேரில் பார்த்திருக்கிறீர்கள். எனக்கு சாமி நம்பிக்கை இருக்கிறது.
"கடவுளை எவன்டா நேரில் பார்த்திருக்கீங்க.? கடவுள் என்பது வரைந்த ஓவியம்தானே, செதுக்கப்பட்ட சிலைதானே, கடவுளை எவண்டா பார்த்தீங்க? இதோ நம் எதிரில் இருக்கிறார்களே பெண்கள் இவர்கள் தான் கடவுள். இந்த உலகமே அழிந்து விட்டாலும் பெண்ணிணுடைய செல்லில் இருந்து குழந்தையை உருவாக்க முடியும் என அறிவியல் சொல்கிறது. ஆனால் ஆண்களின் உடலில் இருந்து அப்படி செய்ய முடியாது. அதனால்தான் அவர்கள் கடவுள் என்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
