ஆறுகளிலும் வாய்க்கால்களிலும் ஆளுயரத்திற்குப் புதர் மண்டி கிடந்ததையும் கடந்த இரண்டு ஆண்டுகளில் நம்மால் பார்க்க முடிந்தது. அப்படியானால் இதற்காக ஒதுக்கப்பட்ட நிதி எல்லாம் எங்கே போனது என்று கேள்வி எழுப்பியுள்ளார்  தினகரன்.

பருவமழை சரிவர பெய்யாததால் தமிழகம் முழுவதும் பல இடங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்தச் சூழலில் தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள ரூ.499.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை மண்டலத்திற்கு ரூ.93 கோடியும், திருச்சி மண்டலத்திற்கு ரூ.109 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், மதுரை மண்டலத்திற்கு ரூ.230 கோடியும், கோவைக்கு ரூ.66 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக  அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அமமுக பொதுச் செயலாளர் தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முழுவதும் ஏரி, குளம், ஆறு, கால்வாய் போன்றவற்றைத் தூர்வாரி பராமரிப்பதற்காக 2017ஆம் ஆண்டு ரூ.100 கோடியும், 2018ஆம் ஆண்டு ரூ.331 கோடியும் ஒதுக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான இடங்களில் இந்த நிதியைக் கொண்டு குடிமராமத்துப் பணிகளைப் பெயரளவுக்குச் செய்துவிட்டு, வேலை முடிந்துவிட்டதாகக் கணக்குக் காட்டியுள்ளதாக மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

அதை நிரூபிக்கும் வகையில் ஆறுகளிலும் வாய்க்கால்களிலும் ஆளுயரத்திற்குப் புதர் மண்டி கிடந்ததையும் கடந்த இரண்டு ஆண்டுகளில் நம்மால் பார்க்க முடிந்தது. அப்படியானால் இதற்காக ஒதுக்கப்பட்ட நிதி எல்லாம் எங்கே போனது?

இந்த நிலையில் நடப்பாண்டில் குடிமராமத்துப் பணிகளுக்காக ரூ.499 கோடியே 68 லட்சம் ஒதுக்கப்பட்டிருப்பதாக பழனிசாமியின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள பொதுப்பணித் துறை இப்போது அறிவித்திருக்கிறது. ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியே என்ன ஆனது என்று தெரியாத நிலையில் பழனிசாமி அரசின் புதிய அறிவிப்பு மக்களை ஏமாற்றும் வேலையே .

உண்மையிலேயே இவர்களுக்கு நீர் மேலாண்மையில் அக்கறை இருக்குமானால், கடந்த இரண்டாண்டுகளாகக் குடிமராமத்துப் பணியின் கீழ் எந்தெந்த நீர்நிலைகள் தூர்வாரி சீரமைக்கப்பட்டன என்ற வெள்ளை அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும். அது மட்டுமின்றி, புதிதாக ஒதுக்கப்பட்டிருக்கும் நிதியைக் கொண்டு எந்தெந்த நீர்நிலைகளில், என்னென்ன பணிகள் நடைபெற இருக்கின்றன என்ற பட்டியலை மாவட்ட வாரியாக வெளியிட வேண்டும்” என்றும் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.