சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு இணையாக ஆளுநரின் செயலாளர் எப்படி அமரலாம் என்று எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

2019ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடர் கடந்த 2ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. சட்டமன்றத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட இருக்கையில் இருந்து ஆளுநர் பன்வாரிலால் உரையாற்றினார். அந்த சமயத்தில் சபாநாயகருக்கு அடுத்து போடப்பட்டிருந்த இருக்கையில் அவருக்கு சரிசமமாக ஆளுநரின் செயலாளரான ராஜகோபால் அமர்ந்திருந்தார். இந்த புகைப்படம்  அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஆளுநர் உரையின் மீது விவாதம் நடைபெற்றுவரும் நிலையில், இன்று அவை கூடியதும் எழுந்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், “சட்டமன்றம் மகத்தானது. மன்றத்தில் நுழையும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது. 

ஆனால், முதல்முறையாக ஆளுநரின் செயலாளர் சபாநாயகருக்கு இணையாக அமர்ந்தது ஏன்? சபாநாயகருக்கு இணையாக ஆளுநரின் செயலர் எப்படி அமரலாம்? இது அவையின் மாண்பைக் குறைத்துள்ளது. எனவே இனி வருபவை நல்லவையாக இருக்கட்டும், வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர், “இனி எதிர்காலத்தில் எவ்வாறு கையாள வேண்டும் என்பதனை ஆய்வு செய்கிறேன்” என்று தெரிவித்தார். 

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் சிறப்பு செயலாளராக இருக்கும் இவர், தமிழக தலைமை செயலாளராக ஜெயலலிதா இரண்டாவது முறையாக இருந்த சமயத்தில், ஸ்டாலினுக்கு உளவு சொன்னார் என்பதற்காக அந்த பதவியிலிருந்து எடுத்துவிட்டார். இதனையடுத்து, டெல்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சகத்தில் செயலாளராக பணியாற்றினார். இதனையடுத்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்ன் கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ராஜகோபாலுக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு உரிய அந்தஸ்தும் பொறுப்பும் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மறைந்த தமிழகத்தின் அரசியல் ஜாம்பவான்களாகிய கருணாநிதியோ அல்லது ஜெயலலிதாவோ இருந்திருந்தால் இப்படி சபாநாயகருக்கு இணையாக அமரவைத்திருப்பது நடந்திருக்க வாய்ப்பே இல்லையென அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.