பிரச்சாரத்தில் குலுங்கி குலுங்கி அழுத துரைமுருகன்... கிராம மக்களும் நெகிழ்ந்த சம்பவம்!!
விக்கிரவாண்டி பிரச்சாரத்தில் பேசிய துரைமுருகன் குலுங்கி கண்ணீர் விட்டு அழுதார். துரைமுருகனின் இந்த பேச்சு பொதுமக்களை கவர்ந்தது.
விக்கிரவாண்டி தொகுதியில் திமுக தரப்பிலும் ஊர் ஊராக, தெருத் தெருவாக திண்ணைகளில் அமர்ந்தும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். திமுக போட்டியிடும் இந்த தொகுதியில் முக்கிய நிர்வாகிகளான துரைமுருகன்,ஜெகத்ரட்சகன்,அ.ராசா போன்றவர்களும் முன்னாள் அமைச்சர்கள் தனித்தனியாக கிராமங்களுக்குச் சென்று மக்களை சந்திக்கிறார்கள்.
அன்னியூரில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய துரைமுருகன் தனது தாயை நினைத்து கண் கலங்கினார். அப்போது பேசிய துரைமுருகன் நான் விவசாய குடும்பத்தில் பிறந்தவன், எங்கள் குடும்பத்தில் விவசாய பம்பு செட்டுக்கு மின் கட்டணம் செலுத்த முடியாமல் எனது தந்தை எனது தாயின் கழுத்தில் காதில் மூக்கில் இருந்த நகைகளை எல்லாம் அடமானம் வைத்தும் விற்றும் மின் கட்டணம் காட்டியுள்ளார்.
அப்போது நான் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன், ஒருநாள் எனது தாயார் இறந்து போனதாக தகவல் வந்தது. ஊருக்குச் சென்று எனது தாயாரின் உடலை பார்த்தபோது என்னால் அழுகையை அடக்கிக்கொள்ள முடியவில்லை. காரணம் எனது தாய் காது மூக்கு தொடைகளில் பொட்டுத் தங்கம் கூட இல்லாமல் விளக்குமாறு குச்சிகளை ஒடித்து அந்த ஓட்டைகளில் சொருகி இருந்தார். அப்படிப்பட்ட விவசாய குடும்பத்தில் பிறந்த நான், தலைவர் கலைஞரின் ஆதரவினால் விவசாய அமைச்சரானேன். அப்போது தலைவர் கலைஞர் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவில் அமைச்சர் என்ற முறையில் என்னை கையெழுத்து போடச் சொன்னார். அப்போது எனது தாயார் முகம் நினைவுக்கு வந்தது. அப்போது விவசாயிகளின் கஷ்டம் உணர்ந்தேன்.
அந்த உத்தரவில் சந்தோஷமாக கையெழுத்திட்டேன். இப்படி விவசாயிகளை வாழ வைத்தவர் தான் தலைவர் கலைஞர் என்று சொல்லிக்கொண்டே துரைமுருகன் குலுங்கி கண்ணீர் விட்டு அழுதார். துரைமுருகனின் இந்த பேச்சு பொதுமக்களை கவர்ந்தது.