dhivakaran planning to get post to his son

சசிகலா குடும்பத்தை சேர்ந்த அனைவரையும் ஒட்டுமொத்தமாக கட்சியை விட்டு ஒதுக்கி விட்டோம் என்று அதிமுக அமைச்சர்கள் அறிவித்தாலும், அது வெற்று அறிவிப்பாகவே உள்ளது.

சசிகலா போய் தினகரன், தினகரன் போய் திவாகரன் என்றுதான், கட்சி மற்றும் ஆட்சியில் அந்த குடும்பத்தின் ஆதிக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், தினகரனை டெல்லி போலீசார் விசாரணை செய்ய தொடங்கியதில் இருந்தே, முடங்கி கிடந்த திவாகரன், வீறு கொண்டு எழ ஆரம்பித்து விட்டார்.

தினகரன் கைது செய்யப்பட்டதை அடுத்து, அவர் வெளிப்படையாகவே, அமைச்சர்களை அழைத்து உத்தரவிடுவதுடன், அவர்களுடன் தொடர்ந்து ஆலோசனையும் நடத்த ஆரம்பித்து விட்டார்.

இந்நிலையில், தமக்கு மணல் அள்ளும் பொறுப்பும், தமது மகன் ஜெய் ஆனந்துக்கு கட்சியில் ஒரு முக்கிய பொறுப்பும் வழங்க வேண்டும் என்று சசிகலாவிடம் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

ஆனால், மதுபான கடைகள் மூடப்பட்டதால், அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடு செய்ய, மணல் அள்ளும் பொறுப்பை தனியாருக்கு வழங்காமல் அரசே ஏற்கப்போவதாக முதல்வர் எடப்பாடி கூறி விட்டார்.

இதனால், வருமானம் பாதிக்கப்படும் என்று டென்ஷன் ஆன அமைச்சர்கள் சிலர், திவாகரனை சந்தித்து முறையிட்டுள்ளனர்.

 அதை கேட்டு முதலில் அதிர்ச்சி அடைந்த திவாகரன், முதல்வர் அப்படியா சொன்னார்? என்று திரும்ப திரும்ப கேட்டுள்ளார்.

அதன் பின்னர், மணல் போனால் போகட்டும், மகன் ஜெய் ஆனந்துக்கு கட்சியில் ஒரு முக்கிய பொறுப்பு கொடுத்தால் போதும் என்ற முடிவுக்கு திவாகரன் வந்து விட்டதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.