டிடிவி. தினகரன் கட்சிக்குள் அவரது உறவினரான திவாகரன் வைத்துள்ள கண்ணிவெடி எப்போது வெடிக்கப் போகிறது என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.

அதிமுகவில் ஓரம் கட்டப்பட்ட பிறகு டிடிவி. தினகரன் மதுரை மேலூரில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்தி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை துவக்கினார். இந்த பொதுக்கூட்டத்தில் மேடையின் முன் வரிசையில் திவாகரனின் மகனுக்கு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்கு காரணம் அதிமுகவில் இருந்து கணிசமான நிர்வாகிகளை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு திவாகரன் அழைத்து வந்தது தான். 

தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் அதிமுகவில் இருந்தவர்களை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு மடை மாற்றி விட்டது திவாகரனின் பங்கு மிகப்பெரியது. இதனால் தான் அவரது மகன் ஜெய் ஆனந்துக்கு பொதுக்கூட்ட மேடையில் முன் வரிசையில் இடம் அளிக்கப்பட்டது. ஆனால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆரம்பித்த பிறகு நிர்வாகிகள் நியமனத்தில் திவாகரன் தன்னிச்சையாக செயல்பட ஆரம்பித்தார். திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் நியமனத்தில் தினகரனை கலந்து ஆலோசிக்காமல் பலருக்கு தனிப்பட்ட முறையில் திவாகரன் வாக்குறுதி அளித்தார்.

 

 இதனை அறிந்த தினகரன் திவாகரனை கலந்து ஆலோசிக்காமல் திருவாரூர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் அறிவித்து அதிரடி காட்டினார். அப்போது ஆரம்பித்த பிரச்சனைதான் தினகரன் திவாகரன் இடையே தற்போது வரை நீடிக்கிறது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து சசிகலாவை தினகரன் நீக்கியது நிர்வாகிகள் பலருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியின் மிக முக்கியமான பொருளாதார சோர்ஸ் சசிகலா என்பது அக் கட்சியின் அடிமட்டத் தொண்டனுக்கு கூட தெரியும். சசிகலா இல்லாமல் கட்சியின் செலவுகளை தினகரன் அணியால் சமாளிக்க முடியுமா என்று நிர்வாகிகள் பலரும் தற்போது பேச ஆரம்பித்துள்ளனர். மேலும் சசிகலா இந்த விவகாரத்தில் மௌனமாக இருப்பது அவர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறது. 

இதனை பயன்படுத்தி திவாகரன் தினகரன் கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வேலையை துவங்கி விட்டார். தன்னால் தினகரன் கட்சிக்கு சென்றவர்களை தானே தொலைபேசியில் அழைத்து சசிகலா தினகரன் இடையே நிலவும் தற்போதைய உறவு குறித்து விரிவாகப் பேசி வருகிறாராம் திவாகரன். மீண்டும் அதிமுகவிற்கு சென்று விடு அல்லது திமுகவிற்கு சென்று விடு தினகரனுடன் இருந்தால் ஒன்றும் தேறாது என்பதுதான் திவாகரனின் தொலைபேசி பேச்சாக இருக்கிறது. 

திவாகரன் பேச்சில் உண்மை இருப்பதை நிதர்சனத்தை உணர்ந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஒப்புக் கொள்கின்றனர். இதன் அடிப்படையில் தான் மூன்றாம் கட்ட நிர்வாகிகள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து விலகி திமுகவில் சேர்ந்து வருகின்றனர். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு இரண்டாம் கட்ட மற்றும் முதல்கட்ட நிர்வாகிகள் கூட வேறு கட்சிகளுக்கு செல்வார்கள் என்று திவாகரன் தரப்பு கூறிக் கொண்டிருக்கிறது.