தினகரன் உள்பட சசிகலா குடும்பத்தை சேர்ந்த அனைவரையும், கட்சியை விட்டு ஒதுக்கிவிட்டதாக, அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.

ஆனால், பன்னீர்செல்வம் சொல்வது போல, இவை அனைத்தும் தினகரன் நடத்தும் நாடகம் என்பதை மறுப்பதற்கில்லை என்பது போலவே, அனைத்தும் நடந்து வருகிறது.

மகாதேவன் இறந்து பதினாறாம் நாள் காரியம் என்ற பெயரில், அமைச்சர்கள் சிலர், திவாகரனை தொடர்ந்து சந்தித்து பேசி வருவதும், அவர்களுக்கு திவாகரன் ஆலோசனை சொல்வதும் நின்ற பாடில்லை.

தஞ்சாவூர் காரரை  நம்பி ஏமாற வேண்டாம் என்று, டெல்லி போலீசார் கைது செய்வதற்கு முன், தினகரன்  சொன்ன வார்த்தையின் அர்த்தம் இப்போதுதான் அதிமுக தொண்டர்களுக்கு புரிந்திருக்கிறது.

தினகரன் கைதுக்கு பிறகு, திவாகரன் வீட்டில் கூடும் கூட்டத்தின் அளவு அதிகமாகி இருக்கிறது. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை எல்லாம், திவாகரன் சொல்வதை கேட்டுதான் அமைச்சர்கள் முடிவு எடுக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

தற்போது, தினகரனை மட்டும் ஒதுக்கிவிட்டு, கட்சியை எப்படி தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது என்பது பற்றித்தான், திவாகரன் வீட்டில் தினமும் ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்.

ஆனால், இப்போது எதுவும் வாய் திறக்க வேண்டாம், கொஞ்ச நாட்கள் பொறுமையாக இருக்கவும், அதற்கு பிறகு அனைத்தையும் பார்த்து கொள்ளலாம் என்று, அமைச்சர்கள் திவாகரனிடம் அறிவுறுத்தி வருகிறார்கள்.

ஆனாலும், துணை பொது செயலாளர் பதவியை எப்படியாவது பெற்று, அதிமுகவை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என்பதே திவாகரனின் திட்டமாக உள்ளது.

அந்த முயற்சிக்கு, தற்போது இடையூறாக இருந்து வருபவர் இளவரசி மகன் விவேக் மட்டுமே. தினகரனுக்கு செல்ல பிள்ளையான  விவேக்கை துணை பொது செயலாளர் ஆக்கவே, சசிகலா விரும்புகிறார்.

அவ்வாறு, விவேக் துணை பொது செயலாளர் ஆகிவிட்டால், திவாகரன் குடும்பத்துக்கு எந்த பதவியும் கிடைக்காது. ஏற்கனவே, விவேக்கும், ஜெய் ஆனந்தும் முகநூலில் மோதிக்கொள்வது தனிக்கதை. 

அதனால், விவேக்கை போலவே, தமது மகன் ஜெய் ஆனந்தத்தையும் பெங்களூரில் தங்க வைத்து, சசிகலாவிடம் சமயம் பார்த்து, தமது எண்ணத்தை நிறைவேற்ற வலியுறுத்துமாறு  அசைன்மென்ட் கொடுத்துள்ளார் திவாகரன்.

முதலில், சசிகலாவின் பொது செயலாளர் நியமனத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும். அடுத்து, சசிகலா குடும்பத்தை சேர்ந்த யார் அரசியலுக்கு வந்தாலும், மத்திய அரசின் தாக்குதல்களை சமாளிக்க வேண்டும்.

இந்த இரண்டு பிரச்சினைகளுக்கு மத்தியில்தான், தினகரனை ஒதுக்கிவிட்டு அதிமுகவை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர திட்டமிட்டு வருகிறார். 

எனவே, இனி என்ன  நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பாப்போம் என்கின்றனர் அதிமுக தொண்டர்கள்.