dhivagaran asking sasikala for deputy secretery post
தினகரனுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு கொடுத்தால், அவர் குடும்ப உறவுகள் அனைத்தையும் ஓரம் கட்டி, கட்சியையும், ஆட்சியையும் தன்வசப்படுத்திக் கொள்வார் என்று பயந்தார் திவாகரன்.
அதனால்தான், துணை பொது செயலாளர் பதவியை தினகரனுக்கு கொடுக்கக் கூடாது என்று கடுமையாக எதிர்த்தார் அவர்.
ஆனால், எதையும் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செய்யும் திவாகரனை விட தினகரனே மேல் என்று நினைத்து, அவருக்கு துணை பொது செயலாளர் பதவியை கொடுத்தார் சசிகலா.
இதனால் வெறுத்துப்போன திவாகரன், சிறையில் சசிகலாவை சென்று சந்திப்பதை கூட தவிர்த்து வந்தார்.

இந்நிலையில், திவாகரன் நினைத்தது போலவே, கட்சி, ஆட்சி என இரண்டையும் தம் வசமாக்கி, குடும்ப உறவுகள் அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டார் தினகரன்.
மேலும், அவருக்கு ஆதரவாக ஒரு குழுவை உருவாக்கிக் கொண்டு, அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் என யாரையும் நம்பாமல், தமது ஆதரவாளர்களை மட்டுமே நம்பி பயணித்துக் கொண்டிருக்கிறார்.
குறிப்பாக, ஜெயலலிதாவால் ஓரம்கட்டி வைக்கப்பட்டிருந்த தளவாய் சுந்தரம்தான், அவருக்கு தலைமை ஆலோசகராக செயல்பட்டு வருகிறார்.
அரசின், டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள அவர், ஜெயலலிதாவின் ஆலோசகராக இருந்த, ஷீலா பாலகிருஷ்ணன் அறையை தமக்கு ஒதுக்கி தரவேண்டும் என்றும் அடம்பிடித்து வருகிறார்.

அனைவரது எதிர்ப்பையும் மீறி, ஆர்.கே.நகரில் போட்டியிடும் தினகரனுக்கு அனைத்துமாக தளவாய் சுந்தரம் செயல்பட்டு வருகிறார்.
அவருக்கு பிடிக்காதவர்கள், அவர்களை பிடிக்காதவர்கள் என, அமைச்சர்கள் உள்பட கட்சியில் உள்ள பலர், ஓரம் கட்டப்பட்டு அதிருப்தியில் இருக்கின்றனர்.
அதனால், கட்சியில் உள்ள பலர் பன்னீர்செல்வம் அணிக்கு போய்விடுவார்கள் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அண்மையில் பெங்களூரு சென்று, சிறையில் சசிகலாவை சந்தித்த திவாகரன், அனைத்தையும் மூச்சு விடாமல் ஒப்பித்துள்ளார்.

மேலும், கட்சியில் தமக்கு மூத்த துணை பொது செயலாளர் பதவி கொடுத்தால், கட்சி உடையாமலும், ஆட்சி கலையாமல் பார்த்துக் கொள்கிறேன் என்றும் சசிகலாவிடம் அவர் கூறி இருக்கிறார்.
எனவே, ஆர்.கே.நகர் தேர்தலுக்கு பிறகு, திவாகரனுக்கோ அல்லது அவரது மகனுக்கோ கட்சியில் ஒரு முக்கிய பொறுப்பு கிடைக்கலாம் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
