திருவாரூர் தேர்தலில் போட்யிடுவதா வேண்டாமா? தேர்தல் நடைபெறுமா? நடைபெறாதா? என்று தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் ஜோதிடம் பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் தஞ்சையில் கட்சி நிர்வாகிகளை கூட்டி வேட்பாளரை அறிவித்து அதிரடி காட்டினார் தினகரன். அதுமட்டும் இல்லாமல் மூன்று நாட்களாக தஞ்சையிலேயே முகாமிட்டு இடைத்தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டு வருகிறார். 

திருவாரூரில் இடைத்தேர்தல் விதிகள் அமலில் உள்ளதால் அங்கு சென்று தேர்தல் பணியாற்றினால் அதனை தேர்தல் செலவுக் கணக்கில் சேர்த்துவிடுவார்கள் என்று மிக தந்திரமாக தஞ்சையில் தேர்தல் அலுவலகத்தையே அமைத்துள்ளார் தினகரன். அங்கு தினகரனுக்கு எல்லாமுமாக இருப்பவர் அ.ம.மு.கவின் பொருளாளரும், தஞ்சையில் எம்.எல்.ஏவாக இருந்து பதவி பறிக்கபட்ட எம்.ரெங்கசாமி தான்.

பெரிய அளவில் பொருளாதார ரீதியாக பலமானவராக இல்லை என்றாலும் பொருளாதார ரீதியில் பலமான பலர் ரெங்கசாமிக்கு அறிமுகம். மேலும் சோழ மண்டலத்தில் உள்ள கள்ளர் சமுதாய பிரதிநிதிகளில் ரெங்கசாமி மிக முக்கியமானவர். அந்த வகையில் கள்ளர் சமுதாயத்தை சேர்ந்த முக்கியஸ்தர்கள் பலரையும் தினகரனை சந்திக்க வைத்து ஆதரவு திரட்டி வருகிறார். மேலும் தேர்தல் நிதியும் வசூலாகி வருவதாக கூறப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் பட்ஜெட்டாக ரூ.20 கோடியை அறிவித்துள்ளாராம் தினகரன். இதில் பத்து கோடி ரூபாயை வேட்பாளர் காமராஜ் ஏற்பாடு செய்ய வேண்டுமாம். ஐந்து கோடி ரூபாயை கட்சியின் முக்கிய நிர்வாகிகளும், எஞ்சிய ஐந்து கோடியை தினகரனும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பேசி முடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் குறிப்பிட்ட சில நிர்வாகிகளை தினகரனே நேரடியாக தொடர்பு கொண்டு தேர்தல் நிதி கேட்டதாக சொல்லப்படுகிறது.

20 கோடி ரூபாயும் கைக்கு வந்த பிறகு வாக்காளர்களுக்கு பட்டுவாடா, பூத் கமிட்டி செலவு, பிரச்சார செலவு என யார் யாரிடம் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விஷயங்களையும் தினகரன் இறுதி செய்துவிட்டாராம். இந்த பட்ஜெட்டை அமல்படுத்த வேண்டிய பொறுப்பு ரெங்கசாமியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் வேட்பாளர் காமராஜ், பத்து கோடி ரூபாயை ஹாட் கேசாக கட்சி தலைமையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 

ஆனால் பத்து கோடி ரூபாய் கேஸ்க்கு தான் எங்கு செல்வது என்று காமராஜ் புலம்ப ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தன்னால் அவ்வளவு பணம் எல்லாம் செலவு செய்ய முடியாது, ஏற்கனவே திருவாரூரில் இரண்டு முறை பொதுக்கூட்டம் நடத்திய வகையிலேயே கோடிகளில் செலவு செய்துள்ளதாக காமராஜ் கூறி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் கட்சி தான் அந்த பத்து கோடியையும் செலவழிக்க வேண்டும் என்று அவர் தினகரனிடம் கூற உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.