கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து உண்மையான தகவல்களை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மூடி மறைக்கிறார் என்று தருமபுரி திமுக எம்.பி. செந்தில்குமார் தெரிவித்துள்ளார். 
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் மிரட்டிவருகிறது. இந்தியாவில் 863 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 27 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்க வேண்டும் என்பதற்காக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தருமபுரி அரசு மருத்துவனைக்கு 1.20 கோடி ரூபாயும் மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு 20 லட்ச ரூபாயும் வழங்கினார் திமுக எம்.பி. டாக்டர் செந்தில்குமார்.


பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. இதை  பகிரங்க குற்றச்சாட்டாகவே சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது சொல்கிறேன். கொரோனா வைரஸ் பற்றி தவறான தகவல்களை தெரிவித்தால், கைது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகிறார். ஆனால், என்னுடைய குற்றச்சாட்டை என்னால் நிரூபிக்க முடியும். 
கொரோனா வைரஸ் தொற்று அறிகுறியுடன் வரும் நோயாளிகளை கையாளும் மருத்துவர்களுக்கு போதிய அளவு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை. தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் மருத்துவர்களுக்கு வழங்கப்படும் உபகரணங்கள் தரமில்லாமல் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட வார்டுகளில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என சொல்லப்படுகிறது. மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து உண்மையான தகவல்களை சுகாதாரத்துறை அமைச்சர் மூடி மறைக்கிறார்” என செந்தில்குமார் தெரிவித்தார்.