அ.தி.மு.க.வின் அகன்ற நெற்றியில் கருப்பு மை வைத்த விவகாரம் தான் கோவையின் மூன்று வேளாண்மை மாணவிகள் தர்மபுரியில் பஸ்ஸோடு எரிக்கப்பட்ட விவகாரம். அக்கட்சியை வன்முறை இயக்கமாக தேசிய அளவில் உருவகப்படுத்தியது இந்த சம்பவம். அந்த அவப்பெயரை மாற்றியமைக்க ஜெயலலிதா சூசகமாக நடத்திய அரசியல் நகர்த்தல்கள் அபாரமானவை. 

பெண் இனத்திற்கே பெரும் எதிரிதான் அ.தி.மு.க.! என்று தர்மபுரி சம்பவத்தை வைத்து எதிர்கட்சிகள் விளாசிக் கொட்டினர். அதைப் போக்குவதற்காக தேர்தல் அறிக்கைகளிலும், ஆட்சியில் இருக்கும் போது சிறப்பு திட்டங்களிலும் பெண்களுக்காக பார்த்துப் பார்த்து செய்தார் ஜெயலலிதா. என்னதான் தனக்காக அப்படியொரு தீ எரிப்பு சம்பவத்தை அ.தி.மு.க.வினர் செய்திருந்தனர் என்றாலும் கூட அவர்களை மன்னிக்க விரும்பவில்லை ஜெயலலிதா. 

இந்த வழக்கில் அந்த மூவருக்காக வழக்கறிஞர்கள் ஆஜரானபோதும், அடுத்து வந்த அ.தி.மு.க. ஆட்சியில் இவர்களை வெளியே கொண்டு வர கட்சி நிர்வாகிகளே முற்பட்டபோதும் முழு மனதாய் சம்மதிக்கவில்லை ஜெ. சொல்லப்போனால் தன் வாழ்க்கை முழுதிலும் இந்த சம்பவத்தையும், அதற்கு காரணமான தன் கட்சியினரான நெடுஞ்செழியன், ரவீந்திரன் மற்றும் முனியப்பன் ஆகியோரை நினைத்தாலே தனக்கு கூசுகிறது என்று வெறுத்து ஒதுக்கினார் ஜெ.,

  

அப்பேர்ப்பட்ட மூவரும் இப்போது எடப்பாடியார் ஆட்சியாளும் நேரத்தில் விடுதலை செய்யப்பட்டிருப்பது கழக சீனியர்கள் மத்தியிலேயே பெரும் அதிருப்தியை கிளப்பியுள்ளது. கடந்த பிப்ரவரி 1 முதல் இவர்களின் விடுதலைக்காக எடப்பாடி தலைமையிலான அரசு நடத்தி வந்த மூவ்களை கவர்னர் மாளிகையே செய்தி குறிப்பில் விலாவாரியாக வெளியிட்டுள்ளது, மக்கள் மத்தியில் கட்சி மீது பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது! என்று சீனியர்கள் வருந்துகிறார்கள்.

 

மூவர் விடுதலை கோப்புகளை மற்ற கைதிகளுக்கான ஃபைலுடன் சேர்த்து தமிழக அரசு அனுப்பியிருந்தது என்றும், கவர்னர் ஒவ்வொன்றாக எடுத்துப் பார்க்கையில் இதை கவனித்து கண்டுபிடித்து, விடுதலைக்கு மறுத்து திருப்பி அனுப்பிவிட்டார்! ஆனால் அக்டோபர் 31-ல் தலைமை செயலர், உள்துறை செயலர் மற்றும் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ஆகியோர் கவர்னரை சந்தித்தபோது இந்த வழக்கை பற்றி பேசியவர்கள், ‘அவர்கள் உள்நோக்கத்துடன் மாணவியரை கொல்லவில்லை! என்று விளக்கினார்கள்.’ என்று சொன்னார்கள்! 

என்பதையெல்லாம் கவர்னர் மாளிகை அறிக்கை புட்டுப் புட்டு வைத்து, அப்பாவி மாணவியர்களை கொன்றவர்களை அ.தி.மு.க. அரசு காப்பாற்ற போராடுவதை மறைமுகமாக தோலுரித்துக் காட்டியிருக்கிறது என்று பொங்குகிறார்கள் சீனியர்கள். மூன்று அதிகாரிகளும் சொன்ன பிறகும் கூட பல சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து, அந்த வழக்கில் உச்சநீதிமன்றம் சொன்ன கருத்துக்களை அலசி, அதன் பின்னே கவர்னர் அந்த கோப்புகளை கையில் எடுத்தார், முழுக்க முழுக்க சட்ட விதிகளின் படியே விடுதலைக்கு ஒப்புதல் அளித்தார்! என்று கவர்னர் மாளிகை அறிக்கை சொல்லியுள்ளதை மீண்டும் சுட்டிக் காட்டும் சீனியர்கள் ‘ஆக எடப்பாடியார் அரசுதான் இந்த மூன்று கொலைகாரர்கள் விடுதலையில் அதிக ஆர்வம் காட்டியது!’ என்பதை மக்கள் மன்றத்துக்கு தெளிவாய் கூறிவிட்டது கவர்னர் தரப்பு. 

என்னதான் தனக்காக அந்த சம்பவம் நடத்தப்பட்டு இருந்தாலும் கூட, அந்த மூன்று ஆயுள் தண்டனை கைதிகளை வாழ்நாள் முழுவதும் வெறுத்தார் அம்மா. ஆனால் ’இந்த அரசையும், கட்சியையும் என்னால்தான் கட்டிக் காக்க முடியும்’ எனும் போக்கில் எடப்பாடியார் இப்படியொரு முடிவெடுத்தது பெரும் தவறு. கண்டிப்பாக இதில் தலையிட்டிருக்க கூடாது! மக்கள் மனதில் அ.தி.மு.க.வை பற்றிய அச்சத்தை துடைக்க அம்மா எடுத்திருந்த முயற்சிகளை இந்த விடுதலையின் மூலம் வீணடித்துவிட்டார் முதல்வர்! இதன் விளைவுகள் தேர்தலில் தெரியும்! என்று  பொங்கியிருக்கிறார்கள்.