முதலமைச்ச்ர்  எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து கவர்னரிடம் மனு கொடுத்த தினகரன் ஆதரவு 18 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்தார். இந்த தகுதி நீக்க நடவடிக்கை சரியானதுதான் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயணன் தீர்ப்பளித்தார். இதையடுத்து அந்த 18 எம்எல்ஏக்களும் தங்களது பதவியை இழந்துள்ளனர்.

ஏற்கனவே தமிழக சட்டப் பேரவையில் திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் தற்போது இந்த 18 எம்எல்ஏக்கள் பதவி இழந்துள்ளதால் ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் 20 தொகுதிகள் காலி இடங்களாக உள்ளன.இந்த 20 தொகுதிகளுக்கும் அரசியலமைப்பு சட்டப்படி அடுத்த 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். அந்த 20 தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்? அதன் தொடர்ச்சியாக தமிழக அரசியலில் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்துள்ளது.


இந்நிலையில் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக உள்ள மேலும் 4 எம்.எல்.ஏ.க்களின் பதவியை பறிக்க சபாநாயகர் தனபால் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


தற்போது தினகரனின் கூடவே உள்ள  எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன் மற்றும் கருணாஸ் ஆகிய அந்த 4 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாம், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோருடன் சபாநாயகர் தனபால் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவரான கருணாஸ் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், அவர் அதிமுக கட்சி விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டியவராக உள்ளார். எனவே அவர் மீது கட்சி விதி மீறல்படி நடவடிக்கை எடுக்க முடியும்.

மற்றபடி அதிமுக எம்.எல்.ஏ.க்களான ரத்தினசபாபதி, பிரபு, கலைச்செல்வன் மூன்று பேரும் டி.டி.வி.தினகரனுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளனர். அதனால் இந்த 4 பேரையும் தகுதி நீக்கம் செய்ய முடியும் என தனபால் நினைக்கிறார்.

இதையடுத்து 4 எம்.எல்.ஏ.க்களும் அதிமுக கட்சி விதிகளை முழுமையாக மீறியுள்ளனர் என்றும், எனவே “உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?” என்று விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்ப சபாநாயகர் தனபால் ரெடியாகி வருகிறார்.

இந்த  4 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் சட்டசபையில் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 210 ஆக குறையும். அந்த நிலையில் அ.தி.மு.க., தனக்கு இருக்கும் மெஜாரிட்டியை நிரூபித்து காட்ட 106 எம்.எல்.ஏக்கள் இருந்தாலே போதும். எடப்பாடி பழனிசாமியை 110 எம்.எல்.ஏ.க்கள் ஆதரிப்பதால் சற்று அதிக பெரும்பான்மையுடன் அவர் ஆட்சியை நடத்த முடியும். எனவே நடிகர் கருணாஸ் உள்பட 4 பேரின் எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்படுவது உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து , திருவாடானை, அறந்தாங்கி, விருத்தாசலம், கள்ளக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளும் காலி இடங்களாக அறிவிக்கப்படும். அந்த 4 தொகுதிகளுக்கு தனியாக இடைத்தேர்தல் நடத்தப்படும் என தெரிகிறது.